ஒருங்கிணைந்த அதிமுக? இன்று மாலை பேசப்போகும் எடப்பாடி பழனிசாமி!
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணி அமைந்ததில் இருந்தே அதிமுக தலைமையில் ஆட்சியா, என்.டி.ஏ. கூட்டணி ஆட்சியா எனும் வாதங்கள் எழுந்துவருகிறது. இது ஒரு பக்கம் பேசப்பட்டுவரும் சூழலில், அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளின் நிலைப்பாடு என்ன எனும் கேள்வியும் பரவலாக எழுந்து வருகிறது.
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டது. அதனைத் தொடர்ந்து அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்திருந்தது. அதேபோல், பாஜகவுடன் பாமக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் அணி, டிடிவி தினகரனின் அமமுக உள்ளிட்டவை இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தது.
தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானபின், தேமுதிக, பாமக, ஓ. பன்னீர்செல்வம், அமமுக நிலைப்பாடு குறித்து கேள்வி எழுந்திருந்தது. இதில், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டனர். பாஜக கூட்டணியில் இருந்த பாமக தற்போது நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி என இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது.
அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இன்னும் அதன் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. இந்தச் சூழலில், சமீப காலமாகவே அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்று இணைத்து செயல்பட வேண்டும் என அதிமுகவில் இருந்து பிரிந்த ஓ. பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் பேசிவருகின்றனர். இன்று அதே நிலைப்பாட்டை அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்கும் வேலையை 10 நாளில் துவங்க வேண்டும் எனவும் அவர் கெடு விதித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்புக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வரவேற்பு அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். அப்படி நடந்தால் தான் மீண்டும் தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி வரும் என அவரின் மனதின் குரலை வெளிப்படுத்தியுள்ளார்.
அதற்காகத்தான் நாங்களும் போராடி கொண்டிருக்கிறோம். செங்கோட்டையனின் எண்ணம் நிறைவேற வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருந்தார். இதேபோல், செங்கோட்டையனுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ள சசிகலா, “செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என்பதை அவர் நிரூபித்துள்ளார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது ஒவ்வொரு தொண்டனின் எதிர்பார்ப்பு. ஒன்றுபட்ட அதிமுகவால் தான் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இன்று மாலை தேனி மாவட்டத்தில் நடைபெறும் அதிமுக பிரச்சார பயணத்தில் பேச இருக்கும் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் குறித்தோ அல்லது அவர் வெளிப்படுத்திய அதிமுக ஒருங்கிணைப்பு குறித்தோ பேசுவாரா எனும் எதிர்பார்ப்பு அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “செங்கோட்டையன் அவரது முடிவை சொல்லி இருக்கிறார். ஆனால், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுப்பதே எங்கள் முடிவு” எனத் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கருத்தைத் தொடர்ந்து இப்படியான கருத்துகள் வெளிவந்துகொண்டிருக்க, இன்று தேனி மாவட்டம், கம்பம், போடிநாயக்கனூர், பெரியகுளம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுகவின் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணம் நடைபெற இருக்கிறது. இதற்காக எடப்பாடி பழனிசாமி தேனிக்கு சென்றிருக்கிறார்.






