எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் இதுவரை 3 கட்டங்களாக 118 சட்டப்பேரவை தொகுதிகளில் பரப்புரையை நிறைவு செய்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. வரும் திங்கட்கிழமை முதல் மதுரையில் 4 ஆவது கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
ஈபிஎஸ்-ன் இந்த சுற்றுப்பயணத்தால் அதிமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்திருப்பதாக அக்கட்சியின் தலைமை கருதுகிறது. இந்த சூழலில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.
எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்துக்கு இடையே நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் நடைபெறும் என திட்டவட்டமாக கூறி வரும் அமித் ஷா, தவெக மாநாட்டில் அதிமுக மீதான விமர்சனம் போன்றவற்றிற்கு இந்த ஆலோசனைக் கூட்டத்தின் மூலம் விடை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், எடப்பாடி பழனிசாமி தனது சுற்றுப்பயணத்தின் அனுபவம் குறித்தும் பேச இருப்பதாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி, சட்டமன்றத் தேர்தல் பணிகள், பூத் கமிட்டி, மற்றும் கூட்டணியை வலுப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை அதிமுக மேற்கொள்ள வேண்டியிருக்கும் நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் அதீத கவனம் பெற்றுள்ளது.





