நல்லகண்ணுவை உடல்நலம் விசாரிக்க மருத்துவமனை வர வேண்டாம் என அமைச்சர் கோரிக்கை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை உடல்நலம் விசாரிக்க யாரும் மருத்துவமனை வர வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், தகைசால் தமிழருமான ஆர்.நல்லகண்ணு கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தினமும் நலம் விசாரித்து வருகின்றனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து நேரில் விசாரித்தார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மருத்துவமனை முதல்வர் தலைமையில் மிகுந்த கவனத்தோடு அவரது உடல்நிலையை தொடர்ச்சியாக கண்காணித்து வந்தார்கள். மருத்துவர் குழுவின் பரிந்துரைப்படி செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. உணவுப் பொருட்கள் சுவாசக் குழாயில் இருப்பதாக சந்தேகப்பட்டு, லேப்ராஸ்கோப்பி மூலம் உணவுத் துகள்கள் அகற்றப்பட்டது.
ஆண்டிபயோடிக் மற்றும் பிற மருந்துகள் செலுத்தப்பட்டது. 48 மணி நேரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதால், நேற்று 26 ஆம் தேதி செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டது. உறவினர்களை அடையாளம் கண்டுகொள்ளும் அளவிற்கு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. பெரிய அளவில் முன்னேற்றம் காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் அவருக்கு சுவாசப் பிரச்சனை ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு, மருத்துவக் குழுவின் அறிவுரைப்படி தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருந்து வருகிறது.
எனினும், கைத்தேர்ந்த மருத்துவக் குழுவோடு சேர்ந்து கூடுதலான மருத்துவர்கள் பரிந்துரை மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்கு, அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் ஒன்றரை மணிக்கு இங்கு வந்து நல்லகண்ணு ஐயா அவர்களை பரிசோதிக்க உள்ளனர். கூடுமானவரை அனைத்து முயற்சிகளையும் மருத்துவ நிர்வாகம் செய்து வருகிறது. அவரை நலம் விசாரிக்க யாரும் மருத்துவமனை வர வேண்டாம்” என்று அவர் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




