--- --:--:-- --

ஆம்புலன்ஸ் தாக்குதலில் 14 பேர் மீது வழக்குப்பதிவு..!

2

டப்பாடி பழனிசாமியின் பிரசாரம் வழியாக கடந்த 108 ஆம்புலன்ஸின் ஓட்டுநர் மற்றும் கர்ப்பிணி தாக்கப்பட்ட விவகாரத்தில் 4 அதிமுக நிர்வாகிகள் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் தனது பிரசாரத்தினுள் ஆம்புலன்ஸ் நுழைந்ததால் ஆத்திரமடைந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது பரப்புரைக்கு இடையூறு செய்ய திமுக அரசு ஆம்புலன்ஸ்களை ஏவி விடுவதாக குற்றம்சாட்டினார். இந்நிலையில், திருச்சி துறையூரில் ஈபிஎஸ் பிரசார கூட்டத்திற்குள் 108 ஆம்புலன்ஸ் நுழைந்ததால் ஆத்திரமடைந்த அதிமுக தொண்டர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் 8 மாத கர்ப்பிணியான உதவியாளரை தாக்கினர்.

 

இதில் காயமடைந்த ஓட்டுநர் செந்தில்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதிமுக கூட்டத்திற்குள் ஒருவர் மயங்கி விழுந்ததாக அழைப்பு வந்ததாலே அங்கே சென்றதாக தெரிவித்தார். அதேநேரம், எடப்பாடி பழனிசாமி பொறுப்பின்றி பேசியதன் விளைவாகவே ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்டதாக, திமுக மருத்துவ அணிச் செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவுமான எழிலன் கூறினார்.

இந்நிலையில், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து அளிக்கப்பட்ட புகாரில், துறையூர் நகர அதிமுக செயலாளர் அமைதி பாலு, கவுன்சிலர் தீனதயாளன், 2 நிர்வாகிகள் மற்றும் பெயர் தெரியாத 10 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், 108 ஆம்புலன்ஸ் மற்றும் பணியாளர்களை தாக்கினால் மருத்துவ பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆம்புலன்ஸ் சங்கம் எச்சரிக்கை விடுத்தது.

நோயாளிகளை அழைக்க செல்லும் போதும் சைரன் சத்தத்துடனே செல்வதால் வெறும் ஆம்புலன்ஸ் செல்கிறது என யாரும் நினைக்க வேண்டாம் என்றும் மேலும், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தாக்கினால் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்த பதாகைகளை 108 ஆம்புலன்ஸ் கதவுகளின் வலதுபுறத்தில் ஒட்டவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆம்புலன்ஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்களின் உயிருக்கும், உடலுக்கும் போதுமான போலீஸ் பாதுகாப்பை வழங்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Right Menu Icon