--- --:--:-- --

அதிருது மதுர..கிடா விருந்து, தண்ணீர் பாட்டில், கலை நிகழ்ச்சி! தடபுடலாக நடக்கும் தவெக மாநாடு ஏற்பாடுகள்!

1

வெக தலைவர் விஜய், தனது 2ஆவது மாநில மாநாட்டை மதுரையில் பிரம்மாண்டமாக நடத்த, தடபுடல் ஏற்பாடுகளை செய்து வருகிறார்.  தமிழ்நாடு அரசியல் களம் இதுபோன்ற மாநாடு ஏற்பாடுகளை கண்டதில் என்று கூறும் அளவுக்கு கிடா விருந்து, 8 லட்சம் தண்ணீர் பாட்டில்கள், கலை நிகழ்ச்சிகள் என களை கட்டி உள்ளது. இதன் மூலம் அரசியலில் தனது பலத்தைக் காட்ட அவர் திட்டமிட்டுள்ளார்.

தமிழக அரசியல் களத்தில் புதிதாகக் கால் பதித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம், தனது எதிர்கால அரசியல் பயணத்தை வடிவமைக்கும் வகையில், தனது இரண்டாவது மாநில மாநாட்டை, வரும் வியாழக்கிழமை மதுரையில்  நடத்தத் தயாராகி வருகிறது.
முதலில் ஆகஸ்ட் 25ம் தேதி மதுரையில் நடக்கும் என நடிகர் விஜய் அறிவித்துஇருந்தார். ஆனால், விநாயகர் சதுர்த்தி விழா வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை காரணம் காட்டி, மாநாட்டை தள்ளிவைக்க வேண்டும் என போலீசார் கூறியிருந்தனர். இதனையடுத்து மாநாடு, ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
இந்த மாநாடு, கட்சியின் தலைவரான விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்கான ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. தனது தேர்தல் திட்டங்கள் மற்றும் எதிர்கால வியூகங்களை விஜய் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, வரவிருக்கும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, தொண்டர்களுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் வகையில் சில முக்கிய முடிவுகளை விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டுக்கான ஏற்பாடுகளை மிக பிரம்மாண்டமாக இருக்கிறது. சுமார் 10 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் பாரபத்தி- ஆவியூர் பகுதியில் 600 ஏக்கர் பரப்பளவுள்ள மைதானத்தில் மாநாட்டு வேலைகள் விரைவாக நடந்து வருகிறது.  மாநாட்டுக் களத்தில் குடிநீர், உணவு, வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் என அனைத்து ஏற்பாடுகளும் மிகத் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகின்றன.
மாநாட்டுக்கான வேலைகளைப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் தங்கப்பாண்டி, கல்லாணை ஒருங்கிணைப்பில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  பிரம்மாண்டமான மேடை, ஒளி, ஒலி அமைப்புகள் என அனைத்தும் கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
காவல்துறையினர் விதித்த அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் கண்ணும் கருத்துமாக ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் வருவதால் அதற்கான பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மதுரை தவெக மாநாடுக்கு வருபவர்கள் இருசக்கர வாகனத்தில் வருவதை தவிர்க்க வேண்டும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
சென்னை நகர் மற்றும் வடமாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக சிவகங்கை, ராமநாதபுரம் செல்லும் கனரக வாகனங்கள் திருச்சி, கீரனூர், புதுக்கோட்டை, காரைக்குடி வழியாக செல்ல வேண்டும். சிகவங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் காரைக்குடி, கீரனூர், புதுக்கோட்டை, திருச்சி வழியாக செல்லவேண்டும்.
விருதுநகர், தூத்துக்குடி , நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் திருமங்கலம், திண்டுக்கல் வழியாக போகவேண்டும். மேற்கு மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி செல்லும் வாகனங்கள் திண்டுக்கல், திருமங்கலம் வழியாக செல்லவேண்டும் என காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.
மாநாட்டை தொண்டர்கள் தெளிவாக காண ஏதுவாக, மாநாட்டு வளாகத்தில் 60-க்கும் மேற்பட்ட எல்இடி திரைகள், 420 ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு வருகிரது. மாநாட்டின் திடலின் உள்ளே, வெளியே செல்ல ஏதுவாக 18 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.  மாநாட்டு திடலில் சுமார் 1.50 லட்சம் நாற்காலிகள் போடப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கென சக்கர நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி மாநாட்டில் தண்ணீர், உணவு தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் இம்முறை அந்த குறையை போக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் தருவதோடு, 100-க்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. 400 தற்காலிக கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, மருத்துவ உதவிக் குழு மற்றும் ஆம்புலன்ஸ்கள் வசதிகள் செய்யப்படுகிறது. மாநாட்டுத் திடலில் கூடியிருக்கும் லட்சக்கணக்கானோரில், யாரேனும் ஒருவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால், உடனடியாக ‘டிரோன்’ மூலம் மருந்துப் பொருள்கள் அனுப்பப்படும எனத் தெரிகிறது. இந்த டிரோன்களில் 25 கிலோ மருந்துப் பொருள்கள் இருக்கும்.
மாநாடு நடைபெறும் நாளில், மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதைச் சமாளிக்கவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தவெக தரப்பில் கூறப்படுகிறது. அசம்பாவிதம் நேரிடாமல் தடுக்க தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வாகனங்கள் வரவழைக்கப்படுகின்றன. காவல் துறைபாதுகாப்புடன், தனியார் நிறுவன பாதுகாவலர்கள் ஆயிரக்கணக்கானோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
விஜய் கட்சி தொடங்கி ஒன்றரை ஆண்டுகளை நெருங்கிவிட்ட நிலையில், சொல்லிக்கொள்ளும்படி அவர் இன்னும் தீவிர அரசியலை கையில் எடுக்கவில்லை. பனையூரில் இருந்தபடி ஒர்க் பிரம் ஹோம் அரசியல் செய்வதாக விமர்சனங்கள் உள்ளது. இதனால், பெரிய அரசியல் கட்சிகள் எதுவும் விஜய் உடன் கூட்டு சேர முன்வரவில்லை.
தேமுதிக, பாமக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் விஜய் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. இதற்கு காரணம், உண்மையில் விஜய்க்கு மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளதா, அல்லது கூடும் கூட்டமெல்லாம் அவரது சினிமா கவர்சிக்காகவா என்ற குழப்பம் ஒரு காரணமாகும்.
இதனால், தனது முழு பலத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் விஜய் உள்ளார். எனவேதான், மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு ஆச்சரியப்பட வைக்கும் வகையில் மதுரையில் பிரம்மாண்ட மாநாட்டை  விஜய் நடத்துகிறார். இது உண்மையில் தமிழக அரசியல் கட்சிகள் இடையே ஆச்சரியத்தையும் கொஞ்சம் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்பதே உண்மை.  இந்த மாநாடு, தவெகவின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கும், மக்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon