--- --:--:-- --

ஜெகதீப் தன்கர் எங்கே? பதவி விலகியும் விலகாத மர்மம்…? மத்திய அரசுக்கு அதிகரிக்கும் நெருக்கடி!

Jagdeep Dhankhar | Salil Bera

Jagdeep Dhankhar | Salil Bera

டெல்லி அரசியல் வட்டாரங்களில் கடந்த சில நாட்களாக ஒரு கேள்வி பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்தியாவின் முன்னாள் துணை குடியரசுத் தலைவரான ஜெகதீப் தன்கர் எங்கே இருக்கிறார் என்பதே அது. கடந்த ஜூலை 22 அன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்த நாள் முதல், அவர் பொதுவெளியில் காணப்படவில்லை. 2027 வரை பதவிக்காலம் இருந்தும், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கிய மறுநாளே அவர் பதவி விலகியதற்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது.

 

குடியரசுத் துணைத்தலைவர் பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் திடுதிடுப்பென விலகினார். பாஜக அரசுக்கு பல நெருக்கடியான தருணங்களில் உற்ற துணைவனாக இருந்து வந்துள்ளார். அவையை மிகத்திறம்பட நடத்தி, எதிர்க்கட்சிகளின் நெருக்கையடி சமாளித்தார். அப்படிப்பட்ட நபர், தனது பதவியில் தரப்பிலிருந்து பதவி விலகியபோதும், அவருக்கு முறைப்படி பிரிவு உபச்சார விழாக்கூட நடத்தப்படவில்லை.

 

இது, மத்திய அரசுக்கும் அவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகளை உறுதிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த நிலைமைக்கு மத்திய அரசின் அலட்சியமே காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த நிலையில், ஜெகதீப் தன்கர் எங்கே என்ற கேள்விக்குரல் மேலும் சத்தமாக ஒலிக்கத் தொடங்கி உள்ளது. குறிப்பாக, இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கவலையிய தெரிவித்து வருகின்றனர்.

 

முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “ஜெகதீப் தன்கர் எங்கே இருக்கிறார்? அவர் பாதுகாப்பாக இருக்கிறாரா? ஏன் எந்த தகவலும் இல்லை?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். பலமுறை அவரைத் தொடர்பு கொள்ள முயன்றும் முடியாமல் போனதாகவும், இது கவலை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

முன்னாள் குடியரசு துணைத் தலைவர் தன்கர், டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இல்லை எனவும், அவரது தனிச் செயலரிடம் இதுபற்றி கேட்டபோது, ஜெகதீப் தன்கர் முழு ஓய்வில் இருப்பதாகக் கூறப்பட்டதாகவும் கபில் சிபல் தெரிவித்துள்ளார். “ஜெகதீப் தன்கர் குறித்து அறிய ‘ஹேபியஸ் கார்ப்பஸ்’ மனு தாக்கல் செய்யலாமா என்று யோசிக்கிறேன்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதேபோல், மகாராஷ்டிராவை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்பி, இந்தியா கூட்டணியைச் சேர்ந்த பல எம்பிக்கள் எனப் பலரும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். இந்த மர்மம் குறித்து மத்திய அரசு ஒரு அறிக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது. ஆனால், மத்திய அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை.

 

மத்திய அரசுடன் ஜெகதீப் தன்கருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே ஜெகதீப் தன்கர் திடீரென பதவி விலகலுக்குக் காரணம் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமாவும் அதன் பின்னணியில் உள்ள மர்மமும், நாட்டின் அரசியல் சூழலில் ஒரு புதிய விவாதத்தைத் தொடங்கி வைத்துள்ளது.

 

ஜெகதீப் தன்கர் அல்லது அவரது குடும்பத்தினர் இந்த மர்மத்தை வெளிப்படுத்தினால்தான் உண்மை வெளிச்சத்துக்கு வரும். அதுவரை, இந்த மர்மம் ஒரு பெரும் புதிராகவே தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை.

Right Menu Icon