--- --:--:-- --

இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

1

தஞ்சை, திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இன்று கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு, பாபநாசம், அம்மாபேட்டை, கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. திருவாரூர் நகர்ப் பகுதிகளிலும், சேந்தமங்கலம், கங்களாஞ்சேரி, மாங்குடி, வடகரை உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்ததால் மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

 

சிவகங்கை மற்றும் மானாமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை வெளுத்துவாங்கியது. புதுக்கோட்டை, திருமயம், அறந்தாங்கி, ஆவுடையார் கோவில் உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டித்தீர்த்தது. அறந்தாங்கியில் மழைநீரில் துள்ளிச் சென்ற பனையேறி கெண்டை மீன்களை மக்கள் ஆர்வமுடன் பிடித்துச் சென்றனர்.

 

விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான அல்லம்பட்டி, சூலக்கரை, சத்திரரெட்டியாபட்டி, வள்ளிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கொடைக்கானலில் பனிமூட்டம் நிலவிய நிலையில், பிற்பகலில் மிதமான மழை பெய்தது.

 

இதே போல, உதகை, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று கடும் பனிமூட்டம் நிலவியது.
இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு வாரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

குறிப்பாக, கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும், நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தேனி, தென்காசி, சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.

 

நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
சென்னையில் வெப்பம் குறைவாகவே இருக்கும் எனவும், மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon