--- --:--:-- --

திமுக அணியில் தேமுதிக? ஸ்டாலினை சந்தித்து பிரேமலதா பேச்சு.. மாறுகிறதா அரசியல் கூட்டணி காட்சி..?

10

தமிழக அரசியல் களத்தில் ஒரு எதிர்பாராத திருப்பமாக, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை அவரது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் இன்று காலை சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு முதல்வரின் உடல்நலனை விசாரிக்கும் மரியாதை நிமித்தமான சந்திப்பாக வெளியே கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் ஆழமான அரசியல் கணக்குகள் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான புதிய கூட்டணிக்கான அச்சாரமாக இந்தச் சந்திப்பு அமையலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூலை 21ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினுக்குத் தலைசுற்றல் ஏற்பட்டது. அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவருக்கு, இதயத் துடிப்பைச் சீராக வைக்க உதவும் ‘பேஸ் மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டது.
மருத்துவர்களின் அறிவுரைப்படி ஓய்வில் இருந்த அவர், வீடு திரும்பிய பிறகு, இன்று முதல் சென்னை தலைமைச் செயலகத்தில் வழக்கமான பணிகளைத் தொடங்கியுள்ளார். இந்தச் சூழலில்தான், முதல்வர் ஸ்டாலினை இன்று அவரது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, எல்.கே. சுதீஷ் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் தேமுதிக சேர முயற்சி செய்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் திடீர் சந்திப்பு சென்னை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. முதல்வரின் உடல்நலனைப் பிரேமலதா நேரில் விசாரித்ததாகத் தெரிவிக்கப்பட்டாலும், இந்தச் சந்திப்பின் பின்னணியில் முற்றிலும் அரசியல் நோக்கம் இருப்பதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக்கு இது ஒரு தொடக்கமாக இருக்கக்கூடும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சந்திப்பின்போது, முதல்வர் ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அத்துடன் திமுகவின் முக்கியத் தலைவரும் அமைச்சருமான எ.வ. வேலுவும் உடனிருந்தனர். அதேபோல, தேமுதிக தரப்பில் பிரேமலதாவுடன் கட்சியின் துணைச் செயலாளர்களான எல்.கே. சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
வழக்கமாக, உடல்நலம் விசாரிக்கச் செல்லும் சந்திப்பில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே உடனிருப்பது வழக்கம். ஆனால், இந்தச் சந்திப்பில் இரு கட்சிகளின் முக்கிய அரசியல் தலைவர்களான எ.வ. வேலு மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் உடனிருந்தது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. திமுக அணிக்கு தேமுதிகவை இழுக்க, எ.வ. வேலு பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்பில் அவரும் இருந்தது, அரசியல் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துகிறது.
கடந்த ஜூன் 1ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்குப் பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுகவுக்குப் பகிரங்கமாக நன்றி தெரிவித்திருந்தார். இதுபோன்ற நிகழ்வுகள் அனைத்தும், கடந்த சில மாதங்களாக இரு கட்சிகளுக்கு இடையே ஒரு இணக்கமான சூழல் நிலவுவதையே வெளிப்படுத்துகின்றன.
திமுக அணியில் உள்ள விசிக, ஒருவேளை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம் செல்லக்கூடும் என்ற பேச்சு உள்ளது. பாமகவும் அதிமுக அணிக்குச் சென்றுவிடும் என்று தெரிகிறது. எனவே, தேமுதிகவின் வரவை திமுகவும் எதிர்பார்த்து உள்ளது. மறைந்த விஜயகாந்தின் செல்வாக்கு மற்றும் தேமுதிகவின் வாக்கு வங்கி, திமுக கூட்டணிக்கு மேலும் பலத்தை சேர்க்கும் என்று ஸ்டாலின் நம்புகிறார்.
சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “முதல்வர் ஸ்டாலினின் உடல்நலனை விசாரிக்கவே சந்தித்தேன். இதில் எந்த அரசியலும் இல்லை. ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு அவ்வளவுதான். கேப்டன் விஜயகாந்தும், முதல்வர் ஸ்டாலினும் பல ஆண்டுகளாக நட்போடு இருந்தார்கள். தேமுதிக கூட்டணி நிலைப்பாடு குறித்து, ஏற்கனவே சொன்னபடி, தேமுதிக மாநாட்டில் அறிவிப்போம்” என்றார்.
பிரேமலதா விஜயகாந்த், எல்.கே. சுதீஷ் உள்ளிட்ட தேமுதிகவினருடனான சந்திப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நட்புடன் நலம் விசாரித்தமைக்கு நன்றி என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படியானாலும், ஸ்டாலின் – பிரேமலதாவின் இந்தத் திடீர் சந்திப்பு, வரவிருக்கும் நாட்களில் தமிழக அரசியல் களத்தில் மேலும் பல வியூக மாற்றங்களையும், புதிய கூட்டணி குறித்த சமிக்கைகளையும் காட்டி உள்ளது. இந்தச் சந்திப்பை அதிமுக கவலையோடும், தமிழக வெற்றிக் கழகம் ஆச்சரியத்தோடும் உற்று கவனித்து வருகின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon