கிராமப்புற சிறு, குறு கடைகளுக்கு லைசென்ஸ் தேவையில்லை – தமிழக அரசு அறிவிப்பு
கிராமப்பகுதிகளில் உள்ள சிறு, குறு கடைகளுக்கு கட்டணம் செலுத்தி உரிமம் பெற தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. கிராமப்பகுதிகளில் உள்ள சிறு, குறு கடைகள், கட்டணம் செலுத்தி உரிமம் பெறுவது கட்டயாம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.
இந்த சட்டத்தின்படி, நகர்ப்புறம் அருகில் உள்ள கிராம பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து என இரு வகையாக பிரிக்கப்பட்டது. அதேபோல, தொழில்களை உற்பத்தி மற்றும் சேவைகள் என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு உட்பட்ட தொழில்களுக்கு தொழில் மற்றும் கிராம பஞ்சாயத்துக்கு ஏற்ற வகையில் 250 ரூபாய் முதல் 3 ஆயிரம் வரை லைசன்ஸ் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
5 லட்சம் முதல் 2 கோடியே 50 லட்சம் வரையிலான முதலீடு உள்ள தொழில்களுக்கு 750 ரூபாய் முதல் 5 ஆயிரம் வரையும், அதற்கு மேற்பட்டவைகளுக்கு 35 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாயும் லைசன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும். அதன்படி, டீக்கடைகள், ஹோட்டல்கள், இறைச்சி கடைகள், சலவை கடைகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட 48 தொழில்கள் பட்டியலிடப்பட்டன.
கிராம பகுதிகளில் தொழில் செய்பவர்களுக்கு ‘லைசன்ஸ்’ கட்டாயம் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பிற்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அவர் தவறான தகவல்களை பரப்புவதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குறிப்பிட்டு இருந்தார்.
புதிய சட்டம் தொடர்பாக, முதலமைச்சரிடம் வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை மனு அளித்த நிலையில் அதன் அடிப்படையில் சிறுவணிகர்கள் உரிமம் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியிருந்தார்.
மேலும் துறை அலுவலர்கள் மற்றும் வணிக சங்க பிரதிநிதிகள் குழுவை அமைத்து பரிசீலனை செய்யப்படும் என்றும் அந்தப் பரிந்துரை அடிப்படையில் புதிய சட்டத்தை அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.






