--- --:--:-- --

தேசிய ஜனநாயக கூட்டணி உடனான உறவு முறிந்தது – ஓபிஎஸ்

2

தேசிய ஜனநாயக கூட்டணி உடனான உறவு முறிந்தது என்றும் பாஜக கூட்டணியில் இருந்து விலகியுள்ளோம் என்றும் ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்தது முதல், அக்கூட்டணியில் ஏற்கெனவே இடம்பெற்றிருந்த ஓ.பி.எஸ்.-க்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

 

குறிப்பாக, அண்மையில், தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியைச் சந்திக்க ஓ.பி.எஸ். நேரம் கேட்டும், அவருக்கு அனுமதி கிட்டவில்லை.இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய கல்வி நிதியை, மத்திய அரசு விடுவிக்காமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டார்.

 

எனவே, தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ.பி.எஸ். அணி நீடிக்கிறதா என்ற கேள்வி எழுந்தது.இந்நிலையில், தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ்., அனைத்து கேள்விகளுக்கும் இன்று பதில் அளிப்பதாக கூறினார். அதற்கு ஏற்ப, சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள சொகுசு விடுதியில் தனது ஆதரவாளர்களுடன் இன்று காலை 10 மணிக்கு ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார்.

 

பின்னர் ஓபிஎஸ் தரப்பில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அப்போது பேசிய ஓ.பி.எஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், “தேசிய ஜனநாயக கூட்டணி உடனான உறவு முறிந்தது. பாஜக கூட்டணியில் இருந்து விலகியுள்ளோம். எந்தக் கட்சியுடனும் தற்போதைக்கு கூட்டணி இல்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

கூட்டணியிலிருந்து விலகியதற்கான காரணங்கள் நாடு அறிந்ததுதான். ஒருமித்த கருத்தாகத்தான் பாஜக கூட்டணியிலிருந்து விலக முடிவு எடுத்துள்ளோம். பாஜக எங்களுக்கு என்ன செய்தது என்பதை நாடே அறியும். யாரையும் வீழ்த்த வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. எதிர்கால திட்டம் குறித்து ஆலோசித்தோம்.” என்று கூறினார். பின்னர் பேசிய ஓ.பி.எஸ், “நடைபயிற்சியின்போது முதலமைச்சரிடம் வணக்கம் தெரிவித்தேன்” என்று முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்பு குறித்து விளக்கம் அளித்தார்.

Right Menu Icon