தவெக நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கத் தடை..!
தமிழக வெற்றிக் கழகம் கட்சி நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவித்துள்ளார். அதன்படி, கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தொண்டர்கள் ஒருபோதும் செயல்படக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் பரப்புரை காலங்கள் மற்றும் உறுப்பினர் சேர்க்கைக்காக வீடு வீடாக செல்லும்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள வாசகங்கள் புகைப்படங்களை ஸ்டிக்கர் ஆக ஓட்ட வேண்டும், தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் அங்கீகரிக்கப்பட்ட பேனர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கட்சியின் அனைத்து நிலை அமைப்புகளால் நடத்தப்படும் உள்ளரங்கம் மற்றும் வெளி நிகழ்ச்சி உள்ளிட்டவற்றிற்கு பட்டாசுகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழக வெற்றி கழகத்தின் நிகழ்ச்சிகள் நடக்கும்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், உற்ற தோழனாக இருக்க வேண்டும் என்றும் என்.ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.





