வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (24-07-2025) காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை 17:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது.
இது, இன்று (25-07-2025) காலை 5:30 மணி அளவில், மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, காலை 7:30-8:30 மணி அளவில் மேற்கு வங்காள – வங்கதேச கரையை கடந்து, காலை 8:30 மணி அளவில், மேற்கு வங்காள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் – வங்கதேச கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது.
மகாராஷ்டிரா – கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.





