அஜித்குமார் விசாரணை அறிக்கை இன்று தாக்கல்..!
கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய மதுரை மாவட்ட நீதிபதி, தனது அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று தாக்கல் செய்கிறார். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார், தனிப்படை காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதனிடையே காவலர்கள் தாக்கியதில், அஜித்குமார் உயிரிழந்ததாக புகார் எழுந்த நிலையில், விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், அஜித்குமார் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய மதுரை மாவட்ட நீதிபதி, தனது அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று தாக்கல் செய்கிறார். இந்த விசாரணை அறிக்கையில் மேலும் பல உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளதாக தெரிகிறதது.
அஜித்குமார் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் காவல்துறை வாகனம் நீண்ட நேரமாக நிற்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்தது.
இதுதவிர, திருப்புவனம் காவல் நிலையத்திற்கு அஜித்குமாரை அழைத்து சென்றதும், பின்பு அவரை விடுவித்ததும் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளன. நகை காணாமல் புகாரில் அஜித் குமாரை அழைத்து சுமார் 15 நிமிடங்களுக்கு விசாரித்த திருப்புவனம் காவலர்கள், பின்பு அவரை விடுவித்து விட்டதாக கூறப்படுகிறது.
திருப்புவனம் காவலர்கள் விசாரித்து அனுப்பிய பிறகு, அன்றிரவே சிறப்பு படை காவலர்கள் அஜித்தை விசாரணைக்கு அழைத்துச் சென்று, காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்காமல், மடப்புரம் கோயில் அருகே வைத்து கடுமையாக தாக்கி விசாரித்துள்ளனர்.
இதன் மூலம், திருப்புவனம் காவலர்கள் அஜித்குமாரை அனுப்பிய பின்னர், அவரை சட்டவிரோதமாக அழைத்துச் சென்று விசாரிக்க சிறப்பு படைக்கு உத்தரவிட்டது யார் என்ற கேள்விகளுக்கு இன்று விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, திருபுவனம் கோயில் காவலாளி அஜித் குமார் மீது புகார் அளித்த பேராசிரியை நிகிதா, 17 நாட்கள் விடுமுறைக்குப் பின்பு மீண்டும் பணிக்கு திரும்பினார். திண்டுக்கல் அரசு கல்லூரியில் பணிமுடிந்து பிரதான வாயில் வழியாக செல்லாமல் கல்லூரியின் பின்புறம் உள்ள குறுக்குப் பாதை வழியாக அவர் சென்றார்.






