தமிழ்நாட்டில் 500 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதா? – அமைச்சர் கீதா ஜீவன்
தமிழ்நாட்டில் 500 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக வெளியான தகவல் தவறு என்று தெரிவித்துள்ள அமைச்சர் கீதா ஜீவன், கடந்த 4 ஆண்டுகளில் கூடுதலாக 44 மையங்கள் திறக்கப்பட்டதாக விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன் வெளியிட்டுள்ள மறுப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்களில் போதிய ஊழியர்கள் இல்லாததால் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர் எனவும், இந்த ஆண்டு மட்டும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன என 05.07.2025 அன்று நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.
அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வண்ணம் தொடர்ந்து இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்தி பிரசுரிக்கப்பட்டு வருகிறது. இச்செய்தியின் அடிப்படையில் தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரனும், முன்னாள் முதலமைச்சர்பன்னீர்செல்வமும், தமிழகத்தில் 500 அங்கன்வாடி மையங்களை மூடுவதற்கு கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவ்வறிக்கைகள் உண்மை நிலைக்கு புறம்பானவைகளாக உள்ளன.
இவ்வரசு 2021-ஆம் ஆண்டு பொறுப்பேற்றபோது 54,439 அங்கன்வாடி மையங்கள் மட்டுமே தமிழகத்தில் செயல்பட்டு வந்தன. கழகத் தலைவர் தளபதியார் ஆட்சி பொறுப்பேற்றபின்பு கடந்த நான்கு ஆண்டுகளில், மேலும் கூடுதலாக 44 அங்கன்வாடி மையங்கள் புதிதாக அனுமதிக்கப்பட்டு தற்போது 54,483 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, அனைத்து குழந்தைகள் மையங்களும் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அவ்வெண்ணிக்கை ஒருபோதும் குறைக்கப்படாது. தேவைப்படின், கூடுதலாக அங்கன்வாடி மையங்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.






