போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி..!
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இன்று சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், மாணவ, மாணவியர்களுடன் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்று விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மதுபானம், கள்ளச்சாராயம் அருந்துவதினாலும், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதினாலும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதைப் பழகத்திற்கு எதிரான உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் வாசிக்க, மாணவ மாணவிகள், அரசு அலுவலர்கள் என அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போதை பொருட்களுக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியானது மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தொடங்கி, கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் நிறைவடைந்தது.
போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதிகூறுகிறேன். மேற்கண்ட உறுதிமொழியினை அனைத்து மாணவ, மாணவிகளும், அரசு அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.






