--- --:--:-- --

மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க தேதியை அறிவித்த முதல்வர்..!

1

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது.இந்தத் திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக மாதம் ரூ.1,000 மாற்றம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதி இந்தத் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

 

அதேசமயம், இந்தத் திட்டம் அறிமுகம் செய்தபோது விண்ணப்பித்த சிலர் பயனாளிகளாக சேர்க்கப்படவில்லை. அதேபோல், பலரும் புதிதாய் இந்தத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கக் காத்திருக்கின்றனர்.எனவே, தகுதியான விடுபட்ட பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கடந்த சட்டசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

 

இது தொடர்பாக அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் விண்ணப்பம் குறித்து முதலமைச்சர் ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்தப்படி விரைவில் தொடங்கப்படும் எனவும், விடுபட்டவர்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் எனவும் உறுதிப்பட தெரிவித்தார். “மகளிர் உரிமை திட்டத்தில் விடப்பட்ட மகளிர் எப்போது முதல் விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூரில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 

முன்னதாக தஞ்சாவூரில் அரசு சரபோஜி கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர், 2 லட்சத்து 25 ஆயிரம் பயனாளிகளுக்கு 558 கோடி ரூபாயில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விவசாய பயிர் கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆயிரத்து 194 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மகால் நூலகம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்று அறிவித்தார். டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி திட்டத்திற்காக 88 கோடியே 72 லட்சம் ரூபாயும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெற் பயிர் சாகுபடிக்காக 132 கோடியே 17 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார்.

 

அடுத்த மாதம் 15 ஆம் தேதி முதல் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் என்றும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் இந்த முகாமில் விண்ணப்பிக்கலாம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து தகுதி இருந்தும் இதுவரை இந்தத் திட்டத்தில் இணைய முடியாத குடும்பத் தலைவிகள், புதிதாக விண்ணப்பிக்கவுள்ளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Right Menu Icon