--- --:--:-- --

சூறைக்காற்றில் ராட்சத பேனர் விழுந்து விபத்து..!

2

கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் சென்னையில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், நேற்று பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது.

 

சென்னை மாநகர் மற்றும் புறநகரின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், அரும்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. வட சென்னை பகுதிகளான திருவொற்றியூர், காசிமேடு, தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, எண்ணூர் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது.

 

ஆவடி அருகே பருத்திப்பட்டில் சாலையில் அமைக்கப்பட்டிருந்த நிழற்பந்தல், பலத்த காற்றில் தூக்கி வீசப்பட்டது.சென்னை வானகரத்தில் மழையின் போது பெய்த சூறைக்காற்றில் சிக்கி, கட்டடத்தின் இரண்டாவது மாடியில் இரும்புக் கம்பிகளுடன் கூடிய ராட்சத பேனர் சரிந்து மின்கம்பிகள் மீது விழுந்தது.

 

இதனால், வாகன ஓட்டிகள் பதைபதைப்புடனேயே அப்பகுதியை கடந்து சென்றனர்.இந்த பேனரின் அடிப்பகுதியில் இருந்த கான்கிரீட் பெயர்ந்து பின்னால் இருந்த வீட்டின் மீது விழுந்தது. இந்த அதிர்வில் வீட்டின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து, வீட்டிற்குள் அமர்ந்திருந்த ஆறுமுகம் என்பவர் மீது விழுந்தது.

 

இதில் படுகாயமடைந்த ஆறுமுகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது தலையில் 15 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பி மீது விழுந்த பேனரை அகற்றினர். பூந்தமல்லி தந்தை பெரியார் நகரில் தனியார் நிறுவனத்தின் மாடியில் போடப்பட்டிருந்த தரக மேற்கூரை, இரும்புக் கம்பிகளுடன் சேர்ந்து சூறைக்காற்றில் பறந்து கீழே விழுந்தது.

 

இதில், சில வீடுகளின் சுவர்கள், ஏசி இயந்திரங்கள், கார் உள்ளிட்டவை சேதமடைந்தன. செங்கல்பட்டு மாவட்டத்தில் வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், காட்டாங்குளத்தூர், சிங்கப்பெருமாள் கோவில், திருக்கழுக்குன்றத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon