பதட்டமாக இருக்கிறது..என சொன்ன தவெக தலைவர் விஜய்..!
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் துவக்கி 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக தயாராகிவருகிறார். இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சி தீவிரமாக மேற்கொண்டுவருகிறது.
அதன்படி அக்கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் சென்று கொண்டிருந்தபோது, அவரது வாகனத்தைப் பின் தொடர்ந்து பல இளைஞர்களும் தங்கள் பைக்கில் வேகமாக சென்றனர். இதில் ஒரு இரு சக்கர வாகனம் மோசமான விபத்தையும் சந்தித்தது. இதனைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய், அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், “எனது வாகனத்தை இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசமின்றி வேகமாகப் பின்தொடர்வது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு கவலையளிக்கிறது. இனி எப்போதும் இதுபோல் செய்யவே கூடாது. இதை எனது கட்டளையாகவோ, கண்டிப்பாகவோ கூட எடுத்துக் கொள்ளலாம்.” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த அறிக்கையைத் தொடர்ந்து தவெகவில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. அதில், “கழக விதிகளின்படி, தமிழக வெற்றிக் கழகத் தலைவரே, தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் ஆவார். இதன்படி, பின்வரும் தோழர்களை, கழகத் தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்கிறேன்.
கழகப் பொதுச் செயலாளர் என். ஆனந்த், உறுப்பினர் மாநிலச் செயலாளர் சி.விஜயலட்சுமி” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசியல் பணி ஒரு பக்கம் சென்றுகொண்டிருக்க, மறுப்பக்கம் தனது இறுதிப் படமான ஜனநாயகன் படத்திலும் விஜய் நடித்துவருகிறார். அதன் இரு நாள் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற இருக்கிறது. இதற்காக விஜய், சென்னையில் இருந்து மதுரைக்கு தனி விமானம் மூலம் சென்று அங்கிருந்து கொடைக்கானல் செல்கிறார்.
இதற்காக அவர் இன்று சென்னை விமான நிலையம் வந்தபோது செய்தியாளர்களிடம் விஜய் பேசினார். அவர் கூறியதாவது, “கொடைக்கானலில் ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக செல்கிறேன். மதுரை மண்ணில் மற்றொரு சந்தர்ப்பத்தில் உங்களைச் சந்தித்துப் பேசுகிறேன். இன்று ஒரு மணி நேரம் உங்களைப் பார்த்துவிட்டு சென்றுவிடுகிறேன்.
நீங்களும் பாதுகாப்பாக உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள். என் வண்டிக்கு பின்னாடி, வேகமாக பைக்கில் வரவோ, ஹெல்மட் போடாமல், பைக்கில் நின்றுகொண்டோ வரவேண்டாம். அப்படியான காட்சிகளைப் பார்க்கவே மனதிற்கு பதட்டமாக இருக்கிறது. அனைவருக்கும் மே தின வாழ்த்துகள். இதனை மதுரை விமானநிலையத்தில் என்னால் சொல்ல முடியுமா என்பது தெரியவில்லை. அதனால் இங்கேயே சொல்லிவிட்டுச் செல்கிறேன்.” எனத் தெரிவித்தார்.






