இன்று இந்த இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!
கோவை, சிவகாசி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல இடங்களில் நேற்று மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளுமை நிலவியது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
சிவகாசி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் வெயில் வாட்டிய நிலையில் திருத்தங்கல், சித்துராஜபுரம், பாறைப்பட்டி, சாட்டியாபும் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ஆலங்கட்டி மழை பெய்தது. மேலும் பாண்டவர் மங்கலம், நாலாட்டின்புதூர், திட்டங்குளம் , மூப்பன்பட்டி பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் கடலையூர் சாலையில் 2 மரங்கள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று ஏப்ரல் 20ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.





