தமிழ்நாடு மாநில ஹஜ் குழு சார்பில் திருப்பூர் மாவட்டத்திலிருந்து பயணம் செய்யும் 165 ஹாஜிகளுக்கான புத்தறிவு பயிற்சி முகாம்..!
முஸ்லிம்கள் ஐந்து முக்கிய கடமைகளில் 5 வது கடமையான புனித ஹஜ் பயணத்தை வருடா வருடம் இஸ்லாமிய மாதமான துல்ஹஜ் மாதத்தில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 2025 ம் ஆண்டான இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து 5800 க்கும் மேற்பட்ட புனித ஹஜ் பயணிகள் சென்னை விமான நிலையத்தில் இருந்து சவுதி ஏர்லைன்ஸ் விமானம் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

புனித ஹஜ் பயணம் செல்கையில், பின்பற்ற வேண்டிய பல்வேறு நடைமுறைகள் மற்றும் செயல்முறைகள் பற்றி விளக்கம் அளிக்க சென்னை, தமிழ்நாடு மாநில ஹஜ் குழு செயலாளரும், நிர்வாக அதிகாரியுமான எம்.ஏ.சித்திக் ஐ.ஏ.எஸ் உத்தரவின்பேரில் ஹாஜிகளுக்கான புத்தறிவு பயிற்சி முகாம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடந்தது.
இதைதொடர்ந்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மற்றும் திருப்பூர் மாவட்ட ஹாஜிகள் ஒருங்கிணைந்த குழு சார்பில் திருப்பூர் மாவட்டத்திலிருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் 165 ஹாஜிகளுக்கான புத்தறிவு பயிற்சி முகாம் திருப்பூர், அவிநாசி அருகே உள்ள தேவராயம்பாளையம் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் குபா பள்ளிவாசல் திருமண மண்டபத்தில் நடந்தது.

புத்தறிவு பயிற்சி முகாம் தேவராயம்பாளையம் குபா பள்ளிவாசல் ஹஜ்ரத் ஜாபர் சாதிக் தாவூதி கிராத்துடன் தொடங்கியது. தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சஃபியுல்லா தலைமை தாங்கி வரவேற்றார். தேவராயம்பாளையம் குபா பள்ளிவாசல் தலைவர் சலீம், முத்தவல்லி உமர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்தி பேசினர்.
தொடர்ந்து அனுப்பர்பாளையம் மஸ்ஜிதே சித்திக் பள்ளிவாசல் தலைமை ஹஜ்ரத் அப்துல் வகாப் அன்வாரி சென்னையிலிருந்து ஜித்தா விமான நிலையம் சென்றவுடன் செய்ய வேண்டிய உம்ரா குறித்து விளக்கி பேசினார்.பின்னர் தாராபுரம் மரக்கடை பள்ளி தலைமை இமாம் முஹம்மது யூசுப் தாவூதி ஹஜ் செய்வது குறித்தும், மதீனாவில் ஜியாரத் குறித்து திருப்பூர் ஹிதாயத்துல் இஸ்லாம் பள்ளிவாசல் தலைமை ஹஜ்ரத் நாஸிர் அஹமது சிராஜி ஆகியோர் விளக்கி பேசினார்.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் விளக்க விரிவுரையாளர்கள் வீடியோ காணொளி மூலம் பயிற்சி அளித்தனர். இதில் கோவை அரசு மருத்துவமனை அலுவலர் ஹாஜி ஜாவித், திருப்பூர் சிக்கன்னா அரசு கல்லூரி உதவி பேராசிரியர் அப்துல் சமது, பெண் பயிற்சியாளர் ஹாஜியா ஆயிஷா பேகம் அப்துல் சமது ஆகியோர் ஹஜ் பயணிகள் வீட்டில் இருந்து புறப்படுவது, சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு ஜித்தா விமான நிலையம் அடைவது, சவுதியில் உள்ள மெக்கா, மதீனா, மினா ஆகிய இடங்களில் தங்குவது, மதீனாவிலிருந்து நாடு திரும்புவது உள்பட பயண விதிமுறைகள், பயண ஆவணங்களின் முக்கியத்துவம், சவுதி அரேபியாவில் இந்திய துணை தூதரகத்தால் புனித பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், பயணத்தின் போது வெவ்வேறு நிலைகளில் உள்ள சட்ட திட்டங்கள், சவுதி பயண ஏற்பாட்டாளர்களின் பங்கு மற்றும் சவுதி அரசின் கட்டுப்பாடுகள், செல்போன் ஆப் மூலம் அனைத்து தொடர்புகளையும் செயல்படுத்துவது குறித்து காணொளி காட்சி மூலம் விளக்கமும் தொடர்ந்து ஹஜ் பயணிகளின் கேள்வி மற்றும் பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர்.

பின்னர் புனித பயணம் வெற்றி அடைய சிறப்பு பிரார்த்தனை துஆ ஓதி நிறைவு அடைந்தது. முடிவில் திருப்பூர் மாவட்ட ஹாஜிகள் ஒருங்கிணைந்த குழு நிர்வாகி சைபுதீன் நன்றி கூறினார்.
முகாமிற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட ஹாஜிகள் ஒருங்கிணைந்த குழு நிர்வாகிகள் முஹம்மது ஆரிப், முஹம்மது சாதிக், பக்ருதீன், சதாம் ஹுசைன், தாராபுரம் முகம்மது ரியாஸ், ரஹ்மத்துல்லா, பள்ளப்பட்டி அன்வர் அலி, ரிஸ்வான், தேவராயம்பாளையம் சிராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் செய்து இருந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




