திருவாடானை : காலி குடங்களின் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
திருவாடானை அருகே குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளான மக்கள் காலி குடங்களின் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு..!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அமைந்துள்ள தேளூர் கிராமத்தில், 52 குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிக்குக் கடந்த ஆறு வருடங்களாகக் குடிநீர் வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அத்தியாவசியத் தேவையான குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் இவர்கள், பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்விதப் பலனும் இல்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது, விலை கொடுத்து குடிநீர் வாங்கி வருவதாகவும், அந்த நீரின் தரம் குறித்தும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். விலைக்கு வாங்கும் குடிநீரால், உடல்நலக் கேடுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், ஏற்கனவே பலர் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குடிநீர் பிரச்சனையால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி, ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள், காலிக் குடங்களுடன் திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காலிக் குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள், தங்கள் குறைகளைத் தெரிவித்து மனு அளிக்க முயன்றனர்.
ஆனால், அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யாரும் அலுவலகத்தில் இல்லை. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த மக்கள், அதிகாரிகள் மீது கடும் அதிருப்தி அடைந்தனர். தங்களின் குறைகளைத் தெரிவிக்கவும், தீர்வு காணவும் அதிகாரிகள் யாரும் இல்லாதது, அவர்களின் அலட்சியப் போக்கையே காட்டுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணாவிட்டால், வரும் காலங்களில் தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




