--- --:--:-- --

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!

1

தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதன் காரணமாக, தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து, குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, மிக கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நெல்லை, தென்காசி மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

நெல்லை மாவட்டத்துக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் சுகுமார் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் கால அவசர கட்டுப்பாட்டு மையத்தை 24 மணிநேரமும் செயல்படச் செய்து, அனைத்து நிகழ்வுகளையும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

அதிக அளவில் மழை பெய்யும் நேரங்களில், பழைய மற்றும் சிதிலமடைந்த கட்டிடங்களுக்கு அருகே செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் மக்கள் இறங்க வேண்டாம் என்றும், அறுந்துவிழுந்த மின் கம்பிகள், பழுதடைந்த பாலங்கள், கட்டிடங்கள், மரங்கள் ஆகியவற்றுக்கு அருகே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இதேபோல, தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கனமழை பெய்யும்போது, திறந்தவெளியிலும், மரங்களின் கீழும் நிற்பதையும், நீர்நிலைகளில் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

தாழ்வான பகுதிகள் மற்றும் நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை நாட்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Right Menu Icon