6 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை..!
தமிழகத்தில் வரும் 11ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் (8-03-2025) பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 9ஆம் தேதி பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் வரும் 11ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.அதிகபட்ச வெப்பநிலை இன்று முதல் வரும் 9ம் தேதி வரை படிப்படியாக 2° செல்சியஸ் வரை உயரக்கூடும்.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் 3 – 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (07-03-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகாலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் இப்பகுதிகளுக்கு வரும் 11ம் தேதி மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.






