சீமான் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு..!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். பெண்கள் என்ன குழந்தை பெற்றுக் கொடுக்கும் எந்திரமா அவர்கள் கருப்பையை அறுத்தெறிய வேண்டும் என பேசியதாகவும் தமிழ் மொழிக்கு எதிராக பேசியதாகவும் தமிழ் மொழி ஒரு காட்டுமிராண்டி மொழி, தமிழ் மொழி ஒரு சனியன் என பெரியார் தெரிவித்ததாகவும் சீமான் கூறியிருந்தார்.
மேலும் ஆண்கள் தங்களின் பாலியல் இச்சைகளை தன்னுடைய மகள் மற்றும் மனைவியுடன் தீர்த்துக்கொள்ளலாம் என்றும் பெரியார் கூறியதாகவும் சீமான் பேசியிருந்தார். அவரது பேச்சு பெரியார் ஆதரவாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சீமானுக்கு எதிராக தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் மற்றும் பெரியார் ஆதரவு அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தன.
சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிடும் போராட்டமும் நடைபற்றது. இதையடுத்து சீமான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. பெரியார் குறித்த சீமானின் சர்ச்சை பேச்சு தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில் சீமான் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச சிலர் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வேறு யாருக்கேனும் இந்த சதித் திட்டத்தில் தொடர்பு உள்ளதா என்றும் போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் 12 வாரத்திற்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சீமான் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





