சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை நிராகரிக்க நீதிமன்றம் மறுப்பு..!
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அதே கிராமத்தைச் சேர்ந்த காவலர் முரளி ராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்பதால் குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என்று கனகராஜ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இது தொடர்பான வழக்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமார், சிபிசிஐடி காவல்துறையினர் அறிவியல் பூர்வமாக விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதாக வாதிட்டார். சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியிலிருந்து மனித கழிவு கலக்கப்பட்ட தண்ணீரை வேங்கைவயல் மக்கள் யாரும் பருகவில்லை என்றும், அந்த நீரைப் பருகியதால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.
இதன் காரணமாகத்தான் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும் முறையிட்டார்.அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
மேலும் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




