--- --:--:-- --

புதிய தேதியில் தவெக மாநாடு..!

1

தவெக மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநாட்டுக்கு அனுமதி கேட்டு தவெக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடிதம் வழங்கியுள்ளார்.

 

தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், கட்சியின் முதல் மாநில மாநாட்டை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை பகுதியில் இம்மாதம் 23-ம் தேதி நடத்த இருப்பதாக முடிவு செய்திருந்தனர்.

 

இம்மாநாட்டுக்காக காவல்துறை விதித்த நிபந்தனைகளை நடைமுறைப் படுத்துவதில் குறிப்பிட்ட நாட்கள் தேவைப்படும். எனவே ஏற்கனவே முடிவு செய்த தேதியில் மாநாட்டை நடத்துவது சிரமம் என்பதால் தேதி தள்ளிப்போனது. தொடர்ந்து, மாநாட்டை எந்த தேதியில் நடத்தலாம் என்று கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வந்தார்.

 

இந்நிலையில் நீண்ட ஆலோசனைக்குப்பிறகு தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27-ம் தேதி நடத்தப்படும் என்று நேற்று காலை நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த செய்தியை அக்கட்சியினர் மற்றும் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

 

ஏற்கனவே செப்டம்பர் 23-ம் தேதி மாநாடு நடத்துவதற்காக காவல்துறையிடம் அக்கட்சியினர் அனுமதி பெற்றிருந்த நிலையில் தற்போது மாநாடு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளதால் அந்த தகவலை மீண்டும் கடிதம் மூலம் விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் கொடுத்து அனுமதி பெற வேண்டும்.

 

இதையடுத்து, அக்டோபர் 27ம் தேதி நடைபெறும் மாநாடுக்கு அனுமதி கேட்டு தவெக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி.ஆனந்த் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடிதம் அளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon