தவெக மாநாடு தேதி..உறுதியாக இருக்கும் விஜய்..!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டின் தேதியை, தான் அறிவிக்கும் வரை வெளியே தெரியக்கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.
நடிகர் விஜய் தான் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டு இருக்கிறார். அதற்கான பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. ஆனால் முதலில் கேட்ட செப்டம்பர் 23ஆம் தேதிக்கு அனுமதி கிடைத்தாலும், அந்த மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த மிகக் குறைந்த நாட்களே இருப்பதால் தேதியை மாற்ற முடிவு செய்தார் விஜய்.
சில தேதிகளைப் பரிசீலனை செய்த விஜய் குழுவினர், இறுதியாக அக்டோபர் மூன்றாம் வாரத்தில் தங்களுடைய கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டை நடத்துவது என முடிவெடுத்தனர்.அதற்கான அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிடத் திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது. அத்துடன் காவல்துறையிலும் அந்த மாற்றுத் தேதிக்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கத் திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால், தவெகவின் முதல் மாநாடு அறிவிப்பு வியாழனன்று அறிவிக்கப்படும் என்ற செய்திகள் வெளியானதால் விஜய் தன்னுடைய முடிவிலிருந்து பின்வாங்கி விட்டார் எனக் கூறப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் தன்னுடைய அனுமதியின்றியோ, தான் அறிவிக்காமலோ கட்சி சார்ந்த எந்த முக்கிய விஷயங்களும் வெளியே கசிந்து விடக்கூடாது என்று உறுதியாக இருக்கிறார் விஜய்.இதற்கான அறிவிப்பு வேலைகள் நடைபெற்று வந்த நிலையில்தான் செய்திகள் வெளியாகிவிட்டன.
இதனால் தற்போது அறிவிப்பு தேதி மாறி இருக்கிறது. இருந்த போதிலும் இரண்டு நாட்களில் அறிவிப்பு வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் இறுதியில் மாநாடு நடக்க வாய்ப்பு உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




