இன்று இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்..!
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவத்துள்ளது.
கேரள கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக, திருப்பூர் மாநகராட்சி சுற்றுவட்டாரத்தில் நேற்று மாலை சுமார் ஒரு மணிநேரம் கனமழை பெய்தது. அதில், காங்கேயம் சாலை, புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
இதே போன்று, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணிநேரம் கனமழை பெய்தது. ரத்தினக்கோட்டை, ஆளப்பிறந்தான், மூக்குடி, நாயக்கரப்பட்டி, துரையரசபுரம், ஆவுடையார் கோயில் உள்ளிட்ட இடங்களில் கனமழை பொழிந்தது. இதில் அண்ணா சிலை முன்பு உள்ள சாலையில் குளம் போல தண்ணீர் தேங்கியது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று காலை வெப்பம் நிலவிய சூழலில், பிற்பகலில் பனிமூட்டம் காணப்பட்டது. இதனை தொடர்ந்து மாலையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக, அப்சர்வேட்டரி, ஏரி சாலை, அண்ணா சாலை, நாயுடுபுரம், கல்லுக்குழி, டிப்போ, கல்லறை மேடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பொழிந்தது.
இதே போன்று நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை மேலும் ஒரு வாரத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் -குன்னூர் மலை ரயில் சேவை கடந்த ஒரு வாரமாக ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.





