ஆளுநர் தேநீர் விருந்து : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!
சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அளித்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். சுதந்திர தினத்தை யொட்டி, அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இடதுசாரிகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டவை புறக்கணித்துள்ளன. அதேவேளையில் ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆளுநரின் பதவிக்கு மதிப்பளித்து அவரது அழைப்பை ஏற்று, தேநீர் விருந்தில் அரசின் சார்பில் பங்கேற்க இருப்பதாக கூறினார்.
தொடர்ந்து, சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேநீர் விருந்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். தேநீர் விருந்திற்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினை ஆளுநர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இந்நிகழ்வின் போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் கை குலுக்கி, சுதந்திர தின வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.






