ரேபரேலி, அமேதி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு..!
உத்தரப்பிரதேசத்தில் அமேதி, ரேபரேலி ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படவிருக்கும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்த முடிவை காங்கிரஸ் கட்சி எடுக்காமல் இருந்த நிலையில் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இவ்விரு தொகுதிகளுக்கும் மூன்றாம் கட்ட தேர்தலில் வருகிற 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ராகுல் காந்தி ஆகியோர் நேற்று நள்ளிரவு வரை ஆலோசனை மேற்கொண்டனர்.
இதில் ரேபரேலி தொகுதியின் எம்பியாக இருபது ஆண்டுகள் பதவி வகித்த சோனியா காந்தி மாநிலங்களவை உறுப்பினராகிவிட்டதால், அந்த தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட முடிவு செய்ததாக கூறப்பட்டது.
அதனோடு அமேதி தொகுதியில் போட்டியிட பிரியங்கா காந்தி விருப்பம் தெரிவிக்காததால், காங்கிரஸின் தீவிர விசுவாசியான கே.எல்.சர்மா அறிவிக்கப்படுவார் என கூறப்பட்டது. இந்நிலையில் இரண்டு தொகுதிகளுக்குமான காங்கிரஸ் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியும் அமேதி தொகுதியில் கே.எல்.சர்மாவும் வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளனர் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதனிடையே அமேதி, ரேபரேலி தொகுதிகளில் பேரணி செல்ல காங்கிரஸ் சார்பில் காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இரு தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், பிரம்மாண்ட பேரணியில் ராகுல் காந்தி கலந்துகொண்டு வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.





