--- --:--:-- --

வேங்கைவயலில் மறு வாக்குப்பதிவு கிடையாது – தேர்தல் அதிகாரி

2

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் உள்ளிட்ட எந்த பகுதியிலும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படாது என்று திருச்சி தொகுதியின் தேர்தல் அதிகாரியான பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.

 

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் கடந்த 2022 டிசம்பர் 26 ஆம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பான வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

 

 

இந்த நிலையில் தங்களுக்கு நியாயம் கிடைக்காததால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வேங்கைவயல் கிராம மக்கள் முடிவெடுத்திருந்தனர். அதன்படி, நேற்று மாலை வரை யாரும் வாக்களிக்கவில்லை. பின்னர், மாலையில் அங்கு சென்ற திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், வேங்கைவயல் கிராம மக்களில் 59 பேர் மட்டும் வாக்களித்தனர். ஆனால், வேங்கை வயல் கிராமத்தில் மொத்தம் 561 வாக்காளர்கள் உள்ளனர்.

 

 

இதேபோல் முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூரைச் சேர்ந்த 9 பேரும், வேங்கைவயலில் வாக்குகளை செலுத்தினர். இந்த நிலையில் திருச்சி மக்களவைத் தொகுதியில் 67.42% வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த சூழலில் திருச்சி தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் உள்ளிட்ட எங்கும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படாது என்று திருச்சி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தும் அதிகாரியான பிரதீப்குமார் அறிவித்துள்ளார்.

 

இதேபோன்று, கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனத்துக்கு எதிராக அப்பகுதியில் உள்ள 4 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அதிகாரிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்கள் மட்டுமே தங்களது ஜனநாயக கடமையாற்றினர்.

Right Menu Icon