--- --:--:-- --

வயநாட்டில் வேட்பு மனு தாக்கல் செய்த ராகுல் காந்தி..!

1

வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, தொண்டர்களுடன் பேரணியாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 26 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது. இதில், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.

 

இவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும், பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரனும் களமிறக்கப்பட்டு உள்ளனர். இதனால், வயநாடு தேர்தல் களத்தின் மீது ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் குவிந்துள்ளது.கடந்த 28 ஆம் தொடங்கிய வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது.

 

இந்நிலையில், தனது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றார். அப்போது, ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களுடன் பேரணியாக சென்று ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

 

வேட்பு மனு தாக்கல் செய்த கையுடன், வயநாடு தொகுதியில் தனது பரப்புரையை தொடங்கினார். திறந்தவெளி வாகனத்தில் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் சென்று ராகுல் தனதுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர், இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது தனக்கு கிடைத்த கவுரவம் என்றார். தான் இங்குள்ள மக்களை வாக்காளர்களாக நினைக்கவில்லை.

 

எனது சகோதரி பிரியங்காவை எப்படி நினைக்கிறேனோ அப்படியே உங்களையும் பார்க்கிறேன். இங்குள்ளவர்களை தனது சகோதர, சகோதரிகளாகவும் குடும்பத்தினராகவும் பார்க்கிறேன். இதை தனது ஆழ்மனதில் இருந்து கூறுகிறேன் என்று ராகுல் காந்தி உருக்கமாக பேசினார்.இதனிடையே, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பரப்புரை மேற்கொள்கின்றனர்.

 

இந்நிலையில் இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவரான ராகுல்காந்தி , திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாட்டில் வாக்கு சேகரிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக தமிழ்நாட்டுக்கு ஏப்ரல் 12 ஆம் தேதி வரும் ராகுல் காந்தி, வட மற்றும் தென் மாவட்டங்களை மையப்படுத்தி பரப்புரையை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

குறிப்பாக், கோவை மற்றும் திருநெல்வேலியில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் ராகுல் காந்தி பங்கேற்று பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அதிலும், கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் முதலமைச்சர் ஸ்டாலினும், ராகுல் காந்தியும் மக்களை சந்தித்து இந்தியா கூட்டணிக்கு வாக்கு சேகரிக்க உள்ளனர்.

 

அத்துடன், காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரும் தமிழ்நாட்டுக்கு வந்து பரப்புரை மேற்கொள்ள மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon