அரசு பள்ளி மாணவர்களுக்கு திடீர் விடுமுறை..!
கொடைக்கானல் அரசு பள்ளியில் முன்னறிவிப்பின்றி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பூம்பாறை அரசு பள்ளி மாணவர்கள் பகலில் பேருந்து நிறுத்தத்தில் நின்றதாக கூறப்படுகிறது.
பள்ளி ஆசிரியர்கள் திடீரென விடுமுறை அளித்ததாகவும் பேருந்து வர நேரம் இருப்பதால் சாலையில் காத்திருப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். மாணவர்கள் சாலையில் நின்ற காட்சிகளை கேமராவில் பதிவு செய்வதை அறிந்த ஆசிரியர் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் ஆசிரியரிடம் கேட்டதற்கு திருவிழா நடப்பதால் விடுமுறை அளித்ததாக தெரிவித்துள்ளார். இது போன்ற பள்ளிக்கான விடுமுறை அறிவிப்புகளை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என கிராம மக்களும், பெற்றோர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.





