நாடாளுமன்ற தேர்தலில் கூடுதல் இடங்கள் கேட்கும் கூட்டணி கட்சிகள்..!
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் அமைக்கப்பட்ட தொகுதி பங்கீட்டுக் குழு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சம்பத், கனகராஜ் உள்ளிட்டோர் டி.ஆர். பாலு தலைமையிலான குழுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சம்பத், கடந்த முறை போட்டியிட்டதைவிட கூடுதல் தொகுதிகளை கேட்டதாக தெரிவித்தார்.
இதனிடையே, திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் மதிமுகவும் பேச்சுவார்த்தை நடத்தியது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் அவைத் தலைவர் அர்ஜூனராஜ், இரண்டு மக்களவை தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கும்படி கோரிக்கை வைத்ததாக கூறினார்.
விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுடன் வரும் 12ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். இதனிடையே, திருவண்ணாமலை, ஆரணி, திருச்சி, பெரம்பலூர் ஆகிய நான்கு தொகுதி நிர்வாகிகளுடன் திமுக ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை நடத்தியது. அப்போது, ஆரணி தொகுதியை காங்கிரசுக்கு வழங்கக் கூடாது என ஒருங்கிணைப்புக் குழுவிடம் திமுக நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
காங்கிரஸ் எம்பி விஷ்ணு பிரசாத்தின் செயல்பாடுகள் குறித்து திமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதே போன்று, திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசருக்கு எதிராகவும் அதிருப்தியை வெளிப்படுத்திய திமுக நிர்வாகிகள், வெற்றி பெற்ற பிறகு நன்றி சொல்லக்கூட திருநாவுக்கரசர் தங்களை சந்திக்கவில்லை எனக் கூறினர்.
இதனிடையே, இந்திய ஜனநாயக கட்சி திமுக கூட்டணியில் இல்லாததால், பெரம்பலூரில் திமுகவே போட்டியிட வேண்டும் என தொகுதி நிர்வாகிகள் வலியுறுத்தினர். அத்துடன், பெரம்பலூரில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் சிலர் கோரிக்கை விடுத்தனர். அப்போது நிர்வாகிகளுக்கு பதிலளித்த ஒருங்கிணைப்புக் குழுவினர், யாரை நிறுத்தினாலும் கருத்து வேறுபாடின்றி தேர்தல் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதனிடையே, ஸ்பெயினில் இருந்து காணொலி வாயிலாக இணைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒருங்கிணைப்புக் குழுவிடம் ஆலோசனை நடத்தினார். கள நிலவரம் குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் கட்சி நிர்வாகிகள் கூறிய கருத்துகளைக் கேட்டறிந்த ஸ்டாலின், தேர்தல் பணிகள் தொடர்பாகவும் ஆலோசித்தார். கூட்டணி கட்சிகள் ஒருபக்கம் கூடுதல் தொகுதிகளை கேட்கும் அதே வேளையில், கட்சி நிர்வாகிகள், காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் திமுகவே போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளதால் அடுத்தடுத்த நகர்வுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.






