--- --:--:-- --

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : சிறந்த மாடுபிடி வீரர், காளைக்கு கார் பரிசு!

1

தைத்திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, தை மாதத்தின் முதல் நாளான இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டியது.

 

மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காலை 7 மணிக்கு அமைச்சர் மூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 10 சுற்றுகளாக நடந்த இந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 817 காளைகள், 431 மாடுபிடி வீரர்கள் களம் காண்டனர்.

 

ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் வீதம் களமிறங்கினர். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கி பிடித்தனர். அவர்களுக்கு சவால்விடும் வகையில், முடிந்தால் தொட்டு பார் என்று காளைகள் சீறி பாய்ந்தன.

 

முதல் சுற்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சார்பாக காளை ஒன்று களமிறக்கப்பட்டது. வாடிவாசலில் இருந்து சீறி வந்த அந்த காளையை எந்தவொரு மாடுபிடி வீரராலும் பிடிக்க முடியவில்லை. அந்த காளை உரிமையாளருக்கு அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தங்கக்காசு பரிசளித்தார். இதே போல், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் காளை, வீரர்கள் கையில் சிக்காமல் சீறி பாய்ந்து வெற்றி பெற்றது.

 

இது போல், ஏராளமான மாடுகள் களத்தில் நின்று ஆடி, உரிமையாளர்களுக்கு பரிசுகளை பெற்று தந்தன. வீரர்கள் ஒத்தைக்கு ஒத்தை ரெடி என காளைகளை அடக்கி தங்ககாசு உள்ளிட்ட பரிசுகளை வென்றனர்.

 

கடைசி வரை விறுவிறுப்புடன் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி, மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. இதில் 17 காளைகளை அடக்கிய அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தி முதல் பரிசை வென்றார். அவருக்கு அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி காரை பரிசாக வழங்கினர். இரு அமைச்சர்களுக்கும் மாலை, பொன்னாடை அணிவித்து வாள் கொடுத்து வெற்றியாளர் கார்த்திக் மரியாதை செய்தார்.

 

13 காளைகளை அடக்கிய ரஞ்சித் இரண்டாம் பரிசை தட்டிச் சென்றார். தலா 9 காளைகளை அடக்கி திருப்புவனத்தை சேர்ந்த முரளிதரன் மற்றும் தேனியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் 3 வது இடத்தை பிடித்தனர். சிறந்த காளையாக அவனியாபுரம் ஜி.ஆர்.கார்த்திக்கின் வேலு என்ற காளை தேர்வு செய்யப்பட்டு கார் பரிசாக வழங்கப்பட்டது. சீனி என்பவரின் காளை, 2 ஆம் இடத்தை பிடித்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon