எண்ணூர் அம்மோனியா கசிவால் பரபரப்பு..!
சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் நிறுவனத்தின் குழாயில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு காரணமாக, கடற்பகுதியில் ஏராளமான உயிரினங்கள் செத்து மிதக்கின்றன.
கோரமண்டல் இண்டர்நேஷ்னல் லிமிடெட் என்னும் நிறுவனம் திருவொற்றியூர் அருகில் உள்ள எர்ணாவூர் கிராமத்தில் உரத் தொழிற்சாலையையும், கத்திவாக்கம் கிராமத்தில் அம்மோனியா சேமிப்பு கிடங்கையும் இயக்கி வருகிறது. கரையோரம் அமைந்துள்ள இந்த ஆலைக்கு கடற்கரையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவு வரை கடலில் குழாய் பதிக்கப்பட்டு, அதில் கப்பல்களில் கொண்டு வரப்படும் திரவ அம்மோனியா ரசாயனம் கொண்டு செல்லப்படுகிறது.
கடலுக்கடியில் 500 மீட்டர் ஆழத்தில் உள்ள இந்த குழாயில் தான் விரிசல் ஏற்பட்டு, அம்மோனியா திரவம் கடலில் கலந்து காற்றில் நெடி பரவியுள்ளது. குழாயில் திரவம் வெளியேறிய பகுதியில் கடல் கொப்பளித்ததாக அதனை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இது சின்ன குப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் பகுதிகளில் கடும் நெடியை உண்டாக்கியதால் அப்பகுதி மக்கள் நள்ளிரவில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, வேன்களில் வேறு இடங்களுக்கு உடனே வெளியேறினர்.
தகவலறிந்து 30-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள், 20க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் மூலம் பல கிலோமீட்டர் தாண்டியுள்ள சமுதாய நலக்கூடம், தேவாலயங்களுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர்.மூச்சுத்திணறலால் மயக்கமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




