அரசியலாகும் வானிலை முன்னறிவிப்பு..!
The Union Minister for Finance and Corporate Affairs, Smt. Nirmala Sitharaman briefing the media on Post 50th meeting of GST Council, in New Delhi on July 11, 2023.
கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெய்த பெருமழையால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. இதில், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 95 சென்டி மீட்டர் மழை பெய்தது.
200 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு பெய்த பெரு மழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே சரியாக கணிக்கத் தவறியதால் தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால், 21 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்தால் அதன் அளவு சரியாக கணிக்க முடியாது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார். இருப்பினும் இந்திய வானிலை ஆய்வு மையம், கனமழை குறித்து கணிக்க தவறிவிட்டதாக, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா குற்றம் சாட்டினார்.
இதை ஆமோதிக்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் குற்றம் சாட்டினார். இதேபோன்று, நெல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய பின் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஒரு படி மேலே சென்று, சென்னை வானிலை ஆய்வு மையத்தையே மூடி விடலாம் என கடுமையாக சாடினார்.
இதற்கிடையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மாவட்டங்களில் பெய்த கனமழையை முன்கூட்டிய கணிக்க தவறியதாக கூறுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.
சென்னை வானிலை ஆய்வு மையத்தை குறிவைத்து செய்யப்படும் விமர்சனங்கள், தமிழ்நாட்டு வானிலை மைய பணியாளர்களை புண்படுத்தும் விதமாகவும், இந்திய தொழில்நுட்பத்தை இழிவுபடுத்தும் விதமாகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தவறான விமர்சனங்களை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




