போகி பண்டிகை குறித்து சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பு..!
போகி பண்டிகையின் பொழுது பயன்பாட்டில் இல்லாத பழைய துணி மற்றும் டயர் நெகிழி பொருட்களை பொதுமக்கள் எரிப்பதை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி புதிய முன் ஏற்பாடை எடுத்துள்ளது.
பழையன கழிதலும், புதியன புகுதலும் என போற்றிக் கொண்டாடப்படும் போகி பண்டிகையின் பொழுது ஆண்டுதோறும் பயன்பாட்டில் இல்லாத பழைய பொருட்களுடன் சுற்றுப்புறச் சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் ரப்பர், டயர்கள், நெகிழி பொருட்கள் எரிக்கப்படுகின்றன.
இதனை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. எனினும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் எரிக்கப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது. எனவே இந்த முறை சென்னை மாநகராட்சி புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.
அதன்படி போகியன்று பொதுமக்கள் எரிக்க நினைக்கும் பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
நாளை முதல் பழைய பொருட்களை பெற்றுக்கொள்ள தூய்மை பணியாளர்கள் வீடு தேடி வருவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனத்தில் சென்று ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






