விஷமாகிப்போன உணவு- 3 குழந்தைகள் பலி! திருப்பூர் விவேகானந்தா சேவாலயத்தில் நடந்தது என்ன? தகவல் தர மறுக்கும் போலீஸ்; நிருபர்கள் போராட்டம்..!
திருப்பூர் விவேகானந்தா சேவாலாய விடுதியில் உணவு சாப்பிட்டு 3 குழந்தைகள் பலியாகி உள்ளனர்; பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் செய்தியாளர்களுக்கு தகவல் தர மறுத்த காவல்துறையினரின் செயல்பாடு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர், அவினாசி சாலை திருமுருகன்பூண்டியில் உள்ளது விவேகானந்தா சேவாலயம் என்ற தொண்டு நிறுவனம். இங்குள்ள விடுதியில் சிறுவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், விடுதியில் உள்ள மாணவர்களுக்கு நேற்றிரவு வழக்கம் போல் உணவு வழங்கப்பட்டுள்ளது.

உணவு சாப்பிட்ட பின்னர் மாணவர்கள் 14 பேருக்கு தலைசுற்றல், வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விடுதி நிர்வாகிகள் உடனடியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளை, திருப்பூர் மற்றும் அவினாசி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
இவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்கள் மாதேஷ் ( வயது 10), பாபு (வயது 10) மற்றும் அத்தீஷ் (11) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. எஞ்சிய சிறுவர்கள், திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட ஆட்சியர் வினித் நேரடியாக ஆய்வு செய்து சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், “உணவில் உள்ள நச்சு கலந்திருப்பது தெரிய வந்துள்ளனர்.
சிகிச்சை பெற்று வரும் 8 பேரில் மூவர் ஐ.சி.யு. வில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உணவு மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பிறகே, இதற்கான காரணம் தெரிய வரும். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

இதனிடையே, தகவல் அறிந்ததும் விவேகானந்தா சேவாலயா விடுதி முன்பு பொதுமக்கள் அதிகளவில் கூடினர். அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து அங்கு விரைத்த திருமுருகன்பூண்டி போலீசார், பொதுமக்களை கலைந்து போகச் செய்தனர்.
அதே நேரம், செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர்களையும் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த செய்தியாளர்கள், போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து முழக்கமிட்டனர். இதனால் அங்கு சலசலப்பு நிலவியது.

திருப்பூரில் புட் பாய்சனால் 3 குழந்தைகள் பலியான விவகாரம், பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




