விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்தி வரும் 6ஆம் கட்ட பேச்சுவார்த்தை..!
டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் வேளாண் சங்க பிரதிநிதிகளுடன் மூன்று மத்திய அமைச்சர்கள் ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது.
டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
விவசாயிகள் தரப்பில் 41 வேளாண் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். கடைசியாக கடந்த ஐந்தாம் தேதி இருதரப்புக்கும் இடையே நடந்த ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படாத சூழல் நீண்ட இடைவெளிக்குப்பின் ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என தொடர்ந்து உறுதியுடன் உள்ளனர். மத்திய அரசு புதிய சட்டங்களால் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் என தெரிவித்து வருகிறது.
ஆனால் விவசாயிகள் குறைந்த பட்ச ஆதார விலை மற்றும் மண்டிமுறைகள் பலவீனமடைந்து பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பலன் அடைந்து விடும் என அச்சம் தெரிவித்து வருகிறார்கள்.







