மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை.. தேடப்பட்டு வந்த கொள்ளையன் நிஷாந்த் கைது!
மதுரை தனிஷ்க் ஜூவல்லரி கடை கொள்ளையில் தேடப்பட்டு வந்த கொள்ளையன் நிஷாந்த் கைது செய்யப்பட்டிருக்கிறார். டாடா குழுமத்தின் பிரபல நகைக்கடை பிராண்டாக தனிஷ்க் ஜூவல்லரியின் புதிய கிளை, சமீபத்தில் மதுரை காளவாசல் பைபாஸ் பகுதியில் திறக்கப்பட்டது. சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் முன்னரே திறக்கப்பட்ட இக்கட்டடத்துக்குள் புகுந்து, கடந்த 12-ஆம் தேதி 11 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆரம்பத்தில் பெரிய கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால், 9 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், நிஷாந்த் என்ற இளைஞர் தனி ஆளாக கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது வெளிச்சத்திற்கு வர அனைவரும் திகைத்து போயினர். மறுபுறம், கொள்ளை சம்பவத்திற்கு நிஷாந்தின் தோழியும், பிரபல இன்ஸ்டா இன்ஃபுளூயன்சருமான மீனாட்சி உடந்தையாக இருந்ததும் அம்பலமானது.
இன்ஸ்டா மற்றும் யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமான மீனாட்சியின் ஸ்கூட்டரில் சென்றுதான் நிஷாந்த் இத்தகைய மாபெரும் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதை அறிந்த காவல்துறை, மீனாட்சியை கைது செய்தனர். நகையை மறைக்க உதவிய நிஷாந்தின் தந்தை சுரேஷையும் கைது செய்து அவர்கள் மறைத்து வைத்திருந்த ஐந்தரை கிலோ நகைகளை மீட்டனர். மேலும், முக்கிய குற்றவாளியான நிஷாந்தை பொள்ளாச்சி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் தனிப்படை காவல்துறையினர் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில், கொள்ளையன் நிஷாந்த் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். தலைமறைவாக இருந்த நிஷாந்த் தர்மபுரி சேஷம்பட்டி பகுதியில் பிடிபட்டார் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




