--- --:--:-- --

மாயமான கணவனை மீட்டுத்தரக் கோரி திருச்சி ஆட்சியரிடம் மனைவி கண்ணீர் மனு

8

மலேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான தனது கணவனை மீட்டுத் தரக் கோரி, திருச்சியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீருடன் மனு அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா உட்பட்ட கருப்பூர் ஊராட்சி, காரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் துரைமுருகன். இவர் கடந்த நான்கரை ஆண்டுகளாக மலேசியாவில் சிஎன்சி (CNC) ஆப்பரேட்டராகப் பணிபுரிந்து வருகிறார்.

 

 

தீபாவளித் திருநாளன்று விடுமுறை தினம் என்பதால், துரைமுருகன் தனது நண்பர்களுடன் பெர்தாக் (Peretak) என்ற பகுதிக்குச் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அங்கு எதிர்பாராதவிதமாகப் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தச் சோக விபத்தில் சுற்றுலா சென்றவர்களில் 5-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் சடலமாக மீட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

 

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் திருச்சியைச் சேர்ந்த துரைமுருகனும் ஒருவர் என்பதால், அவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது நீரில் அடித்துச் செல்லப்பட்டாரா என்ற எந்தவித அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் கடும் மனவேதனை அடைந்த அவரது மனைவி சங்கீதா, தனது கணவனை பத்திரமாக மீட்டுத் தரக் கோரி நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தனது உறவினர்களுடன் நேரில் வருகை தந்தார்.

 

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சங்கீதா கண்ணீர் மல்கக் கூறியதாவது: “தீபாவளி அன்று காலை 9:30 மணியளவில் எனது கணவர் என்னிடம் தொலைபேசியில் பேசினார். இன்று விடுமுறை நாள் என்பதால் நண்பர்களுடன் சுற்றுலா செல்வதாகக் கூறினார். அதன்பிறகு அவரால் எங்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருடன் சென்ற நண்பர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 8 பேருக்கு மேல் அடித்துச் செல்லப்பட்டதாகவும், துரைமுருகன் என்ன ஆனார் என்ற விவரம் தங்களுக்குத் தெரியவில்லை என்றும் தெரிவித்தனர்.”

 

 

தொடர்ந்து பேசிய அவர், இந்திய மற்றும் தமிழக அரசுகள் உடனடியாகத் தலையிட்டு மலேசிய தூதரகத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாயமான தனது கணவனை பத்திரமாக மீட்டுத் தந்து தங்களது குடும்பத்தின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon