மருத்துவ கருவிகளால் உயிருக்கே ஆபத்தா?
இந்திய மருந்தியல் ஆணையம் (IPC) 2020-ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டினால் ஏற்பட்ட கடுமையான பக்க விளைவுகளின் எண்ணிக்கையை முதன்முறையாக வெளியிட்டுள்ளது. இதன் மொத்தம் எண்ணிக்கை 9,373 ஆக பதிவாகியுள்ளது. இது ஆறு ஆண்டுகளில் 808-லிருந்து 2025-ஆம் ஆண்டில் 2,176 ஆக சுமார் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
கடுமையான பக்க விளைவுகள் என்பவை நோயாளிகளுக்கு உயிருக்கு ஆபத்தான நிலைமைகள் அல்லது நீண்டகால மருத்துவமனை சிகிச்சைக்கு வழிவகுக்கும் மருத்துவ நிகழ்வுகளாகும். செப்டம்பர் 10 அன்று மத்திய தகவல் ஆணையத்தின் (CIC) ஓர் அமர்வு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிறப்பித்த ஒரு பகுதி இணக்க உத்தரவைத் தொடர்ந்து அக்டோபர் 27 அன்று ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் இந்த தரவுகளைப் பெற்றது. இந்த தரவுகள் மருந்துக் கட்டுப்பாட்டுக்கான அதிகாரப்பூர்வ தரநிலைகளை வெளியிடும் தன்னாட்சி மத்திய அமைப்பான ஐ.பி.சியால் பெறப்பட்டு மதிப்பாய்வு செய்யப்பட்ட கடுமையான பக்க விளைவுகளின் அளவைக் குறிக்கின்றன.
ஐ.பி.சி தனது வருடாந்திர அறிக்கைகளில் நாடு முழுவதும் அமைந்துள்ள 775 கண்காணிப்பு மையங்களில் பதிவான மருத்துவ உபகரண பக்க விளைவுகளின் எண்ணிக்கையை வழங்கி வருகிறது, அதே நேரத்தில் கடுமையான பக்கவிளைவுகளின் புள்ளிவிவரங்களை ரகசிய தகவலாகவே வைத்துள்ளது.
உதாரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளுக்கான அறிக்கைகள் சாதாரண பக்க விளைவுகளுக்கான பரந்த புள்ளிவிவரங்களை வழங்குகின்றன, ஆனால் கடுமையான நிகழ்வுகள் தனித்தனியாக வகைப்படுத்தப்படவில்லை. இந்த அறிக்கைகளில் சந்தேகத்திற்குரிய உபகரணங்கள் என்ற பிரிவின் கீழ் அறுவை சிகிச்சை கையுறைகள், ஊசிகள், சிறுநீர் பைகள் போன்ற ஒப்பீட்டளவில் சிறிய பொருட்களும் அடங்கும். மேலும், 2022 – 2023 அறிக்கையில், போலி சாதனம் என்று பட்டியலிடப்பட்ட ஒரு ஆண் ஆணுறை கூட இதில் அடங்கும்.
இந்த நாளிதழ் விடுத்த மேல்முறையீட்டைத் தொடர்ந்து, கடுமையான பக்க விளைவுகள் குறித்த தரவுகளுக்காக பிறப்பிக்கப்பட்ட 11 பக்க உத்தரவில், சம்பந்தப்பட்ட மருத்துவ சாதனத்தின் வகை மற்றும் அதன் உற்பத்தியாளர் குறித்த தகவல்களைப் பொதுவெளியில் வெளியிடுவது வணிக ரகசியத்தை மீறுவதாக அமையும் என்ற ஐ.பி.சி வாதத்தை தகவல் ஆணையர் ஜெய வர்மா சின்ஹா மேற்கோள் காட்டினார்.
கடுமையான பக்க விளைவுகள் பதிவான ஒவ்வொரு மருத்துவ உபகரணத்தின் பிராண்ட் விவரங்கள் மற்றும் விளக்கத்தை வெளிப்படுத்த முடியாது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் அவை நடைமுறை தவறுகளால் ஏற்பட்டதா அல்லது மருத்துவ உபகரணத்தினாலேயே ஏற்பட்டதா என்பது உறுதியாக நிரூபிக்கப்படவில்லை.
சி.ஐ.சி முன் ஐ.பி.சி வைத்த வாதத்தில், மருத்துவ உபகரணத்தின் உற்பத்தியாளர் பெயர் தொடர்பான தகவல்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் பிரிவு 8(1)(டி)-ன் கீழ் வெளிப்படுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இது வணிக ரகசியம் மற்றும் மூன்றாம் தரப்பு தகவல்களுடன் தொடர்புடையது. இதை வெளிப்படுத்துவது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் போட்டித் தன்மையைப் பாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018-ஆம் ஆண்டில், மருத்துவ சாதனங்கள் துறை மற்றும் மருத்துவர்கள், மருத்துவமனைகளுடனான அதன் தொடர்பு குறித்த புலனாய்வுத் தொடரான ’இம்ப்ளான்ட் ஃபைல்ஸ்’ இன் ஒரு பகுதியாக , ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை முதன்முதலில் மருத்துவ சாதனப் பயன்பாட்டு பிழைகளின் வகைப்பாடு குறித்து செய்தி வெளியிட்டது. அதில் அபோட் என்ற முன்னணி பார்மா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கரோனரி ஸ்டென்ட்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமான பதிவுகளுக்குக் காரணமாக இருந்தது தெரியவந்தது.
அந்த ஆண்டில் மொத்தம் 566 மருத்துவ உபகரண பக்க விளைவுகள் பதிவாகியிருந்தன. அவற்றில் 290 உலகளாவிய முன்னணி நிறுவனமான அபோட்டின் கரோனரி ஸ்டென்ட்களால் பதிவாகியிருந்தன. அபோட் நிறுவனம் அப்போது தனது ஸ்டென்ட்கள் உலகின் மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட மற்றும் ஆராயப்பட்டவை என்றும், இணையில்லாத பாதுகாப்புப் பதிவைக் கொண்டது என்றும் கூறியிருந்தது.
அதன்பிறகு, இந்தியன் எக்ஸ்பிரஸ் 2018 தரவுத்தொகுப்பைப் புதுப்பிக்குமாறு கோரி பல தகவல் அறியும் உரிமை மனுக்களைத் தாக்கல் செய்தது, ஆனால் சட்டத்தின் விதிகளைக் காரணம் காட்டி அந்த தகவல் மறுக்கப்பட்டது. 2025-ல் இந்த நாளிதழ் மத்திய தகவல் ஆணையத்திடம் தாக்கல் செய்த இறுதி மேல்முறையீட்டைத் தொடர்ந்து, ஆறு ஆண்டுகளுக்கான தரவுத்தொகுப்பு வெளியிடப்பட்டது.
ஒவ்வொரு மருத்துவ சாதனப் பயன்பாட்டுப் பிழைகளின் வகை மற்றும் உற்பத்தியாளர் போன்ற விவரங்கள் ஏராளமாக இருப்பதாகவும் அவற்றை பரப்புவதற்கு தொகுப்பு மற்றும் சேகரிப்பு தேவைப்படுவதால், அது பொது அதிகாரத்தின் நேரத்தையும் வளங்களையும் திசைதிருப்பும் என்றும் சி.ஐ.சி பெஞ்ச் முன் ஐ.பி.சி வாதிட்டது.
ஐ.பி.சி-யின் வருடாந்திர அறிக்கைகளின்படி, 2024-2025 நிதியாண்டில் 14,584 மருந்துப் பயன்பாட்டுக் குறைபாடுகள் பதிவாகியுள்ளன. அதில் 22 வழக்குகள் மட்டுமே தேவையான நடவடிக்கைக்காக மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பிற்கு அனுப்பப்பட்டுள்ளன. 22 சந்தேகத்திற்குரிய உபகரணங்களின் பட்டியலில் முக்கியமாக அறுவை சிகிச்சை கையுறைகள், ஊசிகள் மற்றும் சிறுநீர் பைகள் போன்ற பொருட்களுடன் ஒரு மெக்கானிக்கல் வென்டிலேட்டர் மற்றும் ஒரு ரத்தமாற்ற சாதனமும் அடங்கும்.
அதேபோல, 2023-2024 ஆம் ஆண்டில் ஐ.பி.சி 10,269 மருந்துப் பயன்பாட்டுக் குறைபாடுகளை பட்டியலிட்டு, அதில் 16 வழக்குகளின் பட்டியலை மட்டுமே மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டிற்கு அனுப்பியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




