--- --:--:-- --

அர்னாப் புயலால் ஏனாமில் கடும் சேதம் – நிவாரணம் அறிவிக்கப்படும்

11

புதுச்சேரி ஏனாமில் புயல் பாதிப்புகள் குறித்த அறிக்கை வந்த பின் நிவாரணம் குறித்த நடவடிக்கை எடுத்து அறிவிக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.வங்கக் கடலில் உருவான ‘அர்னாப்’ அதி தீவிரப் புயல், புதன்கிழமை அதிகாலை ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியின் ஏனாம் கடலோரப் பகுதிகளில் கரையை கடக்கத் தொடங்கியது. கரையைக் கடக்கும் போது மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது.

 

 

இதனால் ஏனாம் பகுதி கடும் பாதிப்படைந்து உள்ளது. ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடா அருகே கோதாவரி ஆறு கடலில் கலக்கும் பகுதியில் புதுவை மாநிலத்தின் ஏனாம் பிராந்தியம் உள்ளது. புயல் காரணமாக ஏனாமில் அதி கனமழை பெய்தது. புயல் காரணமாக ஏற்பட்ட 1 முதல் 2 மீட்டர் உயர புயல் அலை மற்றும் தொடர் கனமழையால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரம் கடல் நீர் உள்ளே புகுந்ததால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. காற்று பலமாக வீசியதால் ஏனாமின் பல பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

 

 

புயல் பாதிப்பு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஏனாம் பகுதியில் முகாமிட்டுள்ளார். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.இந்தநிலையில், புதுச்சேரியில் ஏனாம் புயல் பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி ஏனாமில் புயல் பாதிப்புகள் குறித்த அறிக்கை வந்த பிறகு, தகுந்த முடிவெடுக்கப்பட்டுப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.

 

 

பொதுப்பணித்துறை அமைச்சர் ஏனாமில் இருந்து நிவாரணப் பணிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமைச்சர் மற்றும் அந்தந்த பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் அனைவரும் புயல் பாதிப்பு நிலவும் பகுதிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு நிவாரண பணிகளை செய்து வருகின்றனர்.

 

 

பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, அவர்களுக்குத் தேவையான உணவு வழங்குவது உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் அதிகாரிகள் தொடர்ந்து செய்து கொடுத்து வருகிறார்கள். பாதுகாப்புகள் குறித்த கணக்கெடுப்பு வந்த பிறகு நிவாரணம் அறிவிக்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon