நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!
தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்திருந்த மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமைய ஆற்றினர்.
வாக்குப்பதிவு நிலவரப்படி, மதுராந்தகம் தொகுதியில் 86.26 சதவீத வாக்குகளும், தாராபுரம் தொகுதியில் 80.25 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் கட்சி முகவர்கள் முன்னிலையில் மிகத் பாதுகாப்பாக ‘சீல்’ வைக்கப்பட்டன.
மதுராந்தகம் தொகுதியில் பதிவான இயந்திரங்கள் அனைத்தும் தேர்தல் பணியாளர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, ஆத்தூரில் உள்ள சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு காப்பறையில் வைக்கப்பட்டுள்ளன. தாராபுரம் தொகுதியில் இத்தொகுதியில் பதிவான இயந்திரங்கள் திருப்பூரில் உள்ள எல்.ஆர்.ஜி. கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பான அறைக்கு மாற்றப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது
வெள்ளிக் கிழமை (அக். 9) காலை சரியாக 8 மணிக்கு இரு மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. விறுவிறுப்பான இந்த தேர்தலில் பதிவான தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. நாளை காலை 11 மணி அளவில் முதல் கட்ட முன்னிலை நிலவரம் வெளிவரும் என்பதால் அரசியல் கட்சியினர் மிகுந்த ஆர்முடன் காத்திருக்கிறார்கள்.
கடந்த பொதுத்தேர்தலுடன் ஒப்பிடும்போது இந்த இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு சற்று சரிந்துள்ளது. மதுராந்தகத்தில் கடந்த முறை 93.22 சதவீதமாக இருந்தது தற்போது 86.26 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேபோல், தாராபுரத்தில் கடந்த முறை 89.9 சதவீதமாக இருந்தது இப்போது 80.25 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இருப்பினும், அரசியல் நோக்கர்கள் கூறுகையில், “பொதுத்தேர்தலை விட இடைத்தேர்தல்களில் சராசரியாக 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை வாக்குப்பதிவு குறைவது இயல்பான ஒன்றுதான். அந்த வகையில் இந்த இரு தொகுதிகளிலும் பதிவான வாக்குகள், இடைத்தேர்தல் வரலாற்றில் மிகவும் அதிகமான மற்றும் சிறப்பான வாக்குப்பதிவு சதவீதங்களில் ஒன்றாகும்” என்று தெரிவிக்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





