நீட் தேர்வுக்கு எதிர்ப்பு : 8-வது நாளாக பட்டினி போராட்டம்
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் மற்றும் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நீட் எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் சென்னையில் தொடர் பட்டினி போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை கோயம்பேடு (சின்மையா நகர்) பகுதியில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த போராட்டம் இன்று 8-வது நாளை எட்டியுள்ளது.
நீட் தேர்வை எதிர்த்து கூட்டியக்கம் சார்பில் 4 பேர் இணைந்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். இதில் பங்கேற்ற ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் (KMC) அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்சமயம் மணிரத்தினம் தலைமையில் எஞ்சிய 3 பேர் 8-வது நாளாகத் தொடர்ந்து பட்டினி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். தெல்லியில் ஜந்தர் மந்தரில் போராடிய இளைஞர்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற்று அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசு சட்டமன்றத்தில் மீண்டும் நீட் எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் மற்றும் போராட்டங்கள் நடத்த முறையான இடத்தை ஒதுக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழ் ஆர்வலர்கள், பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வருகை தந்து போராட்டக்காரர்களுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு போராட்ட வடிவத்தை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட போதிலும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை உறுதியுடன் இருப்போம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




