--- --:--:-- --

அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமினில் விடுவிப்பு..!

01

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கடந்த மாதம் 20ஆம் தேதி நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அனிதா ராதாகிருஷ்ணன் முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் கருத்துகளை தெரிவித்தார். இதுதொடர்பாக தவெக நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் ஆத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

 

இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என தகவல் பரவிய நிலையில் முன்ஜாமின் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி இளந்திரையன், 7வது முறையாக எம்எல்ஏ-வாக இருப்பவர் இப்படி பேசலாமா என கேள்வி எழுப்பி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

 

அதேநேரத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வுக்காக சென்றிருந்த நிலையில், உத்தரவு கிடைத்த ஒரு மணி நேரத்திற்குள் அங்கு விரைந்த காவல் துறையினர் அவரை கைது செய்தனர். தனது காரில் ஏறி காவல் நிலையம் வருவதாக அனிதா ராதாகிருஷ்ணன் கூறிய நிலையில் அதனை ஏற்க மறுத்த காவல் துறையினர், அவரது காரில் இருந்து இறக்கி காவல் துறை வாகனத்தில் அழைத்து சென்றனர்.

 

இதைக் கண்டு அதிருப்தி அடைந்த அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் காவல் துறை வாகனத்தின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அழைத்துச் செல்லப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணனிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

 

இதனிடையே, எஸ்பி அலுவலகத்தின் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்களை கைது செய்து காவல் துறையினர் அப்புறப்படுத்தினர். ஐந்து மணி நேர விசாரணைக்குப் பிறகு வெளியே அழைத்து வரப்பட்ட அனிதா கிருஷ்ணன், தன்னை பதவி விலகும்படி வற்புறுத்துவதாக குற்றஞ்சாட்டினார். பொய் வழக்கு போட்டு தன்னை அடக்க முடியாது எனவும் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

 

மருத்துவ பரிசோதனைக்கு பின் திருச்செந்தூர் நீதிமன்ற நீதிபதி சிதம்பரம் முன் அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது வரும் 10ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாக கூறியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி சிதம்பரம், அனிதா ராதாகிருஷ்ணனை ஜாமினில் விடுவித்தார். மேலும் 10 நாட்களுக்கு தினமும் காலை 10 மணிக்கு சம்பந்தப்பட்ட ஆத்தூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon