நிறைவேறாத கனவாகவே இருக்கும் – பாரதிராஜா மறைவுக்கு குஷ்பு இரங்கல்!
இயக்குநர் இமயம் பாரதிராஜா உயிரிழந்த நிலையில், அவருக்கு நடிகை குஷ்பு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகை குஷ்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நம் அனைவராலும், மிகவும் நேசிக்கப்பட்டு, மதிக்கப்படும் புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜா நம்முடன் இல்லை என்ற செய்தி அறிந்து துயருற்றேன்.
அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு. அவரது திரைப்படங்கள் பெஞ்ச் மார்க் – ஆக திகழ்கின்றன. அவைதான் இனிவரும் காலங்களிலும் திரைப்படக் கலையின் உண்மையான பாடசாலைகளாக விளங்கும். ஒவ்வொரு சினிமா ரசிகனுக்கும் ஒரு மாபெரும் பாரம்பரியத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார்.
”நான் இரண்டு சடை பின்னிக் கொண்டு நடிப்பது போல ஒரு படம் பண்ணலாம்” என்று அவர் என்னிடம் எப்போதும் கூறுவார். அது இனி நிறைவேறாத ஒரு கனவாகவே எஞ்சியிருக்கும். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.” என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் என போற்றப்படும் இயக்குநர் பாரதிராஜா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




