பாஜகவின் தேசிய தலைவராக நிதின் நபின் பதவியேற்பு..!
பாஜகவின் தேசியத் தலைவராக 2020ஆம் ஆண்டு பொறுப்பேற்ற ஜெ.பி.நட்டாவின் 3 ஆண்டு பதவிகாலம் முடிந்த பின்னரும், மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, செயல் தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நேற்று பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜகவின் செயல் தலைவராக இருக்கும் நிதின் நபினுக்கு ஆதரவாக 37 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தற்போதைய தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நிதின் நபினுக்கு ஆதரவாக மனு அளித்தனர். வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாத நிலையில், பாஜகவின் 12-ஆவது தேசியத் தலைவராக நிதின் நபின் போட்டியின்றி தேர்வானார்.
டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவின் தேசியத் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




