இயற்கை எழில் கொஞ்சும் பாலி தீவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் இந்த தீவிற்கு 7 மில்லியனுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், பாலிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஏனென்றால், அங்கு கடற்கரைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளிடம் மர்ம நபர்கள் கட்டணங்கள் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.. பாலியில் உள்ள கடற்கரைகள் எதுக்கும் எந்த கட்டணம் அந்நாட்டு அரசு விதிக்கவில்லை. ஆனால், சிலர் சுற்றுலா பயணிகளின் வருகையை பயன்படுத்தி கட்டணம் வசூலித்து வருகின்றனர்.
உலுவாட்டுவில் உள்ள ட்ரீம்லேண்ட் கடற்கரை ( Uluwatu’s Dreamland Beach) மிகவும் பிரபலமான கடற்கரையாகும். இங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர். இந்த வாரத்தின் தொடக்கத்தில் ட்ரீம்லேண்ட் கடற்கரையின் பக்கத்தில் உள்ள பார்க்கிங் ஏரியாவில் சில நபர்கள் சுற்றுலா பயணிகளை தடுத்து நிறுத்தி கடற்கரைக்கு செல்வதற்கு 10,000 இந்தோனேசியா ரூபாய்களை (10,000 IDR) கட்டணமாக பெற்றுள்ளனர்.
இதற்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ ஆவணங்களும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், ஆன்லைன் பேமண்டை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, தென் குடா துணை மாவட்டத்தின் தலைவர் கெடுத் கெடே ஆர்டா, செய்தியாளர்களிடம் கூறியதாவது, “சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் வைரலானதையடுத்து, பணம் பறிப்பு குறித்த பிரச்சினையை குறித்து நாங்கள் ஒருங்கிணைந்து ஆலோசித்தோம். இன்னும் உண்மையான தகவல்கள் எங்களுக்குத் தெரியவில்லை.
கிராம அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்; ஆனால் அங்கு யாரும் இல்லை. இச்சம்பவம் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா பகுதிகளில் விதிமுறைகள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும். எல்லாம் திட்டமிட்டபடி நடைபெறும் என நம்புகிறோம்” என்றார்.
பெகாட்டு பாரம்பரிய கிராமத்தின் தலைவர் மதே சுமெர்தா, ட்ரீம்லேண்ட் கடற்கரையின் நிர்வாகத்தை கவனிக்கும் பெகாட்டு பாரம்பரிய கிராமம் எந்தவிதமான நுழைவுக் கட்டணத்தையும் வசூலிப்பதில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.






